மக்களவை தேர்தல்; அதிரடியாக அரசியலில் களமிறங்குகிறாரா? அல்லு அர்ஜுன் விளக்கம்!
தனது நண்பனும், நாந்தியால் தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ-வுமான ஷில்பா ரவி ரெட்டிக்கு அல்லு அர்ஜுன் ஆதரவு தெரிவித்திருந்தார்.
அல்லு அர்ஜுன்
தெலுங்கு திரையுலகில் பெரும் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றவர் அல்லு அர்ஜுன். தற்போது பான் இந்தியன் மார்க்கெட்டை குறிவைத்துள்ளர். இதற்கிடையில் ஆந்திர பிரதேசத்தில் தேர்தல் நடைபெற்றது.
இதில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தெலுங்கு தேசம் + ஜனசேனா + பாஜக கட்சிகள் கூட்டணியமைத்து தேர்தலை சந்திக்கிறது. சிரஞ்சீவியின் குடும்பத்தினர் தங்களது ஆதரவை பவன் கல்யாணிற்கு அளித்துள்ள நிலையில், அதிர்ச்சியளிக்கும் விதமாக அல்லு அர்ஜுன் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அன்றே, ஒரே நேரத்தில் எந்த அனுமதியும் இன்றி ஏராளமானவர்களைக் கூட்டம் சேர்த்ததாகக் கூறி நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஷில்பா ரவி ரெட்டி ஆகியோர் மீது தேர்தல் விதிமீறல் தொடர்பான வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விளக்கம்
இதனால், அல்லு அர்ஜுன் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார் என்றும் அரசியலில் களமிறங்கப் போகிறார் என்றெல்லாம் பேச்சுகள் அடிபட்டன. இது தொடர்பாக விளக்கமளித்துப் பேசியிருக்கும் நடிகர் அல்லு அர்ஜுன், "எனக்கு எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பில்லை என்பதை நான் முதலில் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
நான் எந்தக் கட்சியையும் ஆதரிக்கவில்லை. நடுநிலையாக மக்கள் பக்கம் நிற்பவன் நான். என் நண்பன் ஷில்பா ரவி ரெட்டி கடந்த தேர்தலிலேயே என்னை அழைத்திருந்தார். அப்போது என்னால் அவருக்கு ஆதரவளிக்க முடியவில்லை. ஆனால், நிச்சயம் வருவேன் என்று அவருக்கு வாக்கு கொடுத்திருந்தேன்.
அதன்படி இந்தத் தேர்தலில் அவரைச் சந்தித்து அவருக்கு ஆதரவளித்தேன். எங்களின் நட்புக்காக மட்டுமே நான் இதைச் செய்தேன். வேறெந்த அரசியல் உள்நோக்கங்களும் இதில் இல்லை.
எனது மாமா பவன் கல்யாண், நான் எப்போதும் துணை நிற்கும் எனது நண்பர் ரவி மற்றும் எனது மாமனார் திரு.ரெட்டி ஆகியோருக்கும் இது பொருந்தும். நான் அவர்களுக்கு ஆதரவாக நிற்பேனே தவிர எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவாக இருக்க மாட்டேன்" என்று தெரிவித்துளார்.