ஆந்திராவில் அதிர்ச்சி - நடிகர் அல்லு அர்ஜுன் மீது பரபரப்பு வழக்கு !!!
நடிகர் அல்லு அர்ஜுன் மீது பரபரப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அல்லு அர்ஜுன்
தெலுங்கு திரையுலகில் பெரும் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றவர் அல்லு அர்ஜுன். தற்போது பான் இந்தியன் மார்க்கெட்டை குறிவைத்துள்ள அவர், "புஷ்பா 2" படத்தில் நடித்து வருகின்றார்.
புஷ்பா படம் இந்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த நம்பிக்கையில் பெரும் பொருட்செலவில் தற்போது தயாராகி வருகின்றது புஷ்பா 2. படம் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் நாளை, ஆந்திர பிரதேசத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. சட்டமன்ற தேர்தலும், நாடாளுமன்ற தேர்தலும் ஒரே நாளில் நடைபெறுகிறது. இதில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தெலுங்கு தேசம் + ஜனசேனா + பாஜக கட்சிகள் கூட்டணியமைத்து தேர்தலை சந்திக்கிறது.
வழக்குப்பதிவு
மெகா குடும்பம் என அழைக்கப்படும் சிரஞ்சீவியின் குடும்பத்தினர் முழுவதுமாக தங்களது ஆதரவை பவன் கல்யாணிற்கு அளித்துள்ள நிலையில், அதிர்ச்சியளிக்கும் விதமாக அல்லு அர்ஜுன் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவை தெரிவித்துள்ளார்.
நேற்று நிந்தியாலா தொகுதி ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரவிச்சந்திர ரெட்டிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு அதிர்ச்சியளித்தார். இதுவே பலருக்கும் அதிர்ச்சியளித்த நிலையில், தற்போது அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன் அனுமதி பெறாமல் விமான நிலையத்தில் இருந்து ரவிச்சந்திர ரெட்டியின் வீடு வரை ஊர்வலமாக சென்ற நிலையில், அல்லு அர்ஜுன் ரவிச்சந்திர ரெட்டி உட்பட 3 பேர் மீது தேர்தல் விதிமுறையை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.