எதிர்பாராமல் பவன் கல்யாண் செய்த செயல் - மேடையிலேயே எச்சரித்த பிரதமர் மோடி!!
நடைபெறும் வரும் மக்களவை தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிக்கிறது பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி.
ஆந்திர அரசியல்
ஆந்திர மாநிலத்தில் வரும் மே 13-ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெறவுள்ளது. மொத்தமுள்ள 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும், 25 மக்களவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவுளள்து.
தற்போது அம்மாநிலத்தில், ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகின்றது. தேர்தல் தனித்து களம் காணும் அக்கட்சிக்கு எதிராக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, பவன் கல்யாணின் ஜன சேனா மற்றும் பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றது.
தேர்தல் பரப்புரை இறுதி கட்டத்தை நெருங்கி வரும் சூழலில், பிரதமர் மோடி ஆந்திர மாநிலத்தின் ராஜமுந்திரி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவரை மேடையில் சந்தித்து கூட்டணி கட்சிகள் மரியாதை செய்தனர்.
பிரதமர் எச்சரிக்கை
ஜன சேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் பிரதமர் மோடிக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்த பிறகு, பிரதமரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க முயன்றார். அப்போது அவரை தடுத்து நிறுத்திய பிரதமர் மோடி, இப்படி செய்யக்கூடாது என செய்கை காட்டி எச்சரித்தார்.
சட்டமன்ற தேர்தலில், மொத்தமுள்ள 175 இடங்களில் தெலுங்கு தேசம் 144 இடங்களிலும், ஜன சேனா 21 இடங்களிலும், பாஜக 10 இடங்களிலும் போட்டியிடுகின்றன .அதே போல, 25 மக்களவை இடங்களில் 17 தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியும், 6 தொகுதிகளில் பாஜகவும், 2 இடங்களில் ஜன சேனா கட்சியும் போட்டியிடுகிறார்கள்.