ஒற்றைத் தலைமை..தனித்தீர்மானம் நிறைவேற்றத் தடை! விடிய விடிய விசாரணை
அதிமுக பொதுக்குழு கூட்டத்தை இன்று நடத்த அனுமதி அளித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், ஒற்றைத் தலைமை தொடர்பான தனித் தீர்மானத்தை நிறைவேற்ற தடை விதித்துள்ளது.
பொதுக்குழு கூட்டம்
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
நேற்று தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்த தடை இல்லை என உத்தரவிடப்பட்டது.
நீதிபதிகள் தடை
தீர்மான விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் தனி நீதிபதி தீர்ப்பளித்தார். இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் தலைமையிலான அமர்வில் நள்ளிரவே விசாரணைக்கு வந்தது.
விடிய விடிய நடைபெற்ற விசாரணையில், அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், பொதுக்குழுவை நடத்த தடையில்லை என உத்தரவிட்டனர். அதே நேரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்களைத் தவிர, ஒற்றைத் தலைமை தொடர்பான தனித் தீர்மானத்தை நிறைவேற்ற நீதிபதிகள் தடை விதித்தனர்.
பின்னடைவு
பொதுக்குழுவில் புதிய தீர்மானங்கள் குறித்து முடிவெடுக்கலாம், ஆனால் அதனை அமல்படுத்த கூடாது என உத்தரவிடுமாறு பழனிசாமி தரப்பு கோரிய நிலையில், அதனை நீதிபதிகள் நிராகரித்தனர்.
கூட்டத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் உரிமை உறுப்பினர்களுக்கு உள்ளதாக கூறிய நீதிபதிகள், மற்ற விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்தாலும், அதனை தீர்மானமாக நிறைவேற்ற கூடாது என உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவால், ஒற்றைத் தலைமை குறித்த தனித் தீர்மானத்தை நிறைவேற்ற திட்டமிருந்த பழனிசாமி தரப்பு பின்னடைவை சந்தித்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை..!