எதுவுமே தெரியாமல் இருக்க நான் என்ன ஸ்டாலினா - ஆர்ப்பாட்டத்தில் ஆவேசமான ஈபிஎஸ்!
கள்ளக்குறிச்சி விவகாரத்திற்கு சிபிஐ விசாரணை வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஏராளமானோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன் எதிரொலியாக அதிமுக சார்வில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, இன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். அப்போது பேசிய அவர் "கள்ளக்குறிச்சியில் நடந்த துயரமான சம்பவம் மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அளிக்கிறது.
திமுக பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் போதைப்பொருள் விற்பனை மற்றும் கள்ளச்சாராய மரணம் அதிகரித்துள்ளது. காற்றை எப்படி தடை செய்யமுடியாதோ அதே போன்று மக்கள் உணர்வுகளுக்குத் தடை விதிக்க முடியாது.
சிபிஐ விசாரணை
அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கு இடையூறு செய்து முதல்வர் அடக்குமுறையைக் கையாளுகிறார். நான் ஒரு மருந்து பெயரைச் சொன்னேன். அந்த மருந்தை வைத்து அமைச்சர் மா.சுப்பிரமணியம் என்னைக் கிண்டல் செய்கிறார்.
ஒன்றும் தெரியாமல் இருக்க நான் ஒன்றும் ஸ்டாலின் அல்ல. இப்படிப்பட்ட அமைச்சர்கள் இருக்கும் வரை இந்த நாட்டை எவராலும் காப்பாற்ற முடியாது. காவல் நிலையம், நீதிமன்றம் அருகிலேயே கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுகிறது.
கள்ளக்குறிச்சி உயிரிழப்பு விவகாரத்திற்கு திமுக அரசு தான் காரணம். இந்த விவகாரத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டு கொள்ளவில்லை. கள்ளக்குறிச்சி சம்பவத்தில் நீதி கிடைக்க வேண்டும்.
ஆனால் இங்குள்ள காவல்துறை, தனி நபர் ஆணையம் மூலம் நீதி கிடைக்காது. கள்ளக்குறிச்சி விவகாரத்திற்கு சிபிஐ விசாரணை வேண்டும். எனவே இந்த விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநரை நாளை அதிமுக குழு சந்திக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.