பாஜக'விலிருந்து அதிமுக விலகிய பிறகுதான் ஸ்டாலினுக்கு இஸ்லாமியர்கள் ஞாபகமே வருகிறது - எடப்பாடி பழனிசாமி!
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது என்று சொன்ன பிறகு தான் இஸ்லாமியர்களின் ஞாபகமே மு.க. ஸ்டாலினுக்கு வருகிறது என்று எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் அதிமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி கட்சி துண்டு அணிவித்து வரவேற்றார். இதற்கான நிகழ்ச்சி சேலம் சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது "வேண்டும் என்றே திட்டமிட்டு அதிமுக சிறுபான்மை மக்களுக்கு எதிராக இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை கடந்த காலத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் எல்லாம் ஒரு செயற்கை தோற்றத்தை உருவாக்கினார்கள்.
அதிமுக தமிழகத்தில் சுமார் 30 ஆண்டுகாலம் ஆட்சி புரிந்தது. அந்த 30 ஆண்டு காலத்தில் தமிழகத்தில் இருக்கின்ற சிறுபான்மை மக்கள் இஸ்லாமியர்களாக இருந்தாலும் சரி, கிறிஸ்தவர்களாக இருந்தாலும் சரி ஒரு சிறிய பிரச்சனை கூட இல்லாமல் சிறப்பான ஆட்சி தந்த கட்சி அதிமுக அரசாங்கம்.
ஸ்டாலினுக்கு பயம் வந்து விட்டது
அதிமுகவுக்கு மதம் கிடையாது, சாதி கிடையாது. அவரவர்கள் மதம் அவர்களுக்கு புனிதமானது. அதில் யாரும் தலையிட முடியாது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது என்று சொன்ன பிறகு தான் இஸ்லாமியர்களின் ஞாபகமே அவருக்கு வருகிறது.
இஸ்லாமியர்களின் உணர்வுகளை நான் சட்டமன்றத்திலேயே எடுத்து வைக்கின்றபோது இப்போது தான் எதிர்க்கட்சி தலைவருக்கு பாசம் வந்து விட்டது என்று சொன்னார். இல்லை நான் எப்போதுமே சாதிக்கும், மதத்திற்கும் அப்பாற்பட்டவன்.
அனைத்து மதத்தையும் நேசிக்க கூடியவன். எந்த சாதிக்கும், எந்த மதத்துக்கும் அதிமுகவுக்கு விரோதம் கிடையாது. ஒரே பார்வையில் தான் நாங்கள் பார்ப்போம். இதனால் மு.க.ஸ்டாலினுக்கு பயம் வந்து விட்டது. என்று பேசியுள்ளார்.