நடிகை நயன்தாரா சட்டத்தை மீறவில்லை - வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி
நடிகை நயன்தாரா சட்டத்தை மீறவில்லை என வழக்கறிஞர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
சட்டத்தை மீறவில்லை
''இந்தச் சட்டத்துக்கான அறிவிக்கையை 2021 டிசம்பரில் மத்திய அரசு வெளியிட்டது. இந்த ஆண்டு ஜனவரி 25-ம் தேதி ஜனாதிபதி இதற்கு ஒப்புதல் அளித்திருந்தார்.
இந்த சட்டத்தின் பிரிவு 53 ஒரு சலுகையை வழங்கியிருக்கிறது. அதாவது இந்த சட்டம் அமலாகும் காலத்திலிருந்து 10 மாதங்களுக்கு gestation period என்ற விதிவிலக்கு தந்திருக்கிறார்கள்.
சட்டம் வருவதற்கு முன்போ, அந்த நேரத்திலோ வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவதற்கு பதிவு செய்திருந்தவர்கள் எந்த சட்ட சிக்கலும் இல்லாமல் உரிமையுடன் தங்கள் குழந்தையைப் பெற்று வளர்ப்பதற்கான சலுகைக் காலம் இது.
இதன்படி பார்த்தாலும், அக்டோபர் 25 வரை குழந்தை பெற்றுக்கொள்பவர்களை இந்த சட்டம் கட்டுப்படுத்தாது. எனவே, நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி இந்த சட்டத்தை மீறவில்லை.
சட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லையா?
இதில் இன்னொரு விஷயத்தையும் பார்க்க வேண்டும். என்னதான் வாடகைத்தாய் முறைப்படுத்தல் சட்டம் ஜனவரி 25-ம் தேதி அமலாகிவிட்டாலும், இந்த சட்டத்தை செயல்படுத்துவதற்கான விதிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் 2022 ஜூன் 21-ம் தேதி அன்றுதான் வெளியிட்டது.
அதன்பிறகு 90 நாட்களுக்குள் தேசிய அளவில் National Surrogacy Board என்ற அமைப்பும், மாநில அளவில் State Surrogacy Board என்ற அமைப்பும் உருவாக்கப்பட வேண்டும்.
வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுத் தரும் வசதிகளைக் கொண்ட கருத்தரிப்பு மையங்கள் இதில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவதை இந்த அமைப்பு கண்காணித்து முறைப்படுத்தும். சட்டமீறல்கள் பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கும்.
இந்த எல்லா சட்ட நடைமுறைகளும் நடந்து முடிந்தால்தான் இந்த சட்டம் அமலுக்கு வந்ததாக அர்த்தம். தமிழகத்தில் சமீபத்தில்தான் இந்த நடைமுறைகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, எப்படிப் பார்த்தாலும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி சட்டத்தை மீறவில்லை'' என்கிறார் ரமேஷ்.