மிக்ஜாம் புயல் பாதிப்பு: நிவாரண பணிகளுக்கு 'நடிகர் சூரி' நிதியுதவி - எவ்வளவு தெரியுமா..?
மிக்ஜாம் புயல் பாதிப்பு நிவாரண பணிகளுக்காக நடிகர் சூரி நிதியுதவி வழங்கியுள்ளார்.
புயல் பாதிப்பு
மிக்ஜாம் புயலால் கடந்த வாரம் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதில் தலைநகர் சென்னை கடுமையாக பாதிக்கப்பட்டது. பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனைவரும் தாராளமாக நிதி வழங்கிடுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
இதனையடுத்து பல்வேறு தரப்பினர் தங்களால் முடிந்த நிதியை வழங்கி வருகின்றனர். அந்தவகையில் நடிகர் சூரி தனது அம்மன் உணவகம் சார்பில் ரூ.10 லட்சம், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.
நடிகர் சூரி நிதியுதவி
அதற்கான காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் நேரில் சந்தித்து வழங்கினார். இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள தனது எக்ஸ் பதிவில் "தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் மிக்ஜாம் புயல் – கன மழை நிவாரணப் பணிகளுக்கு துணை நிற்கின்ற வகையில், சமூக அக்கறையுடன் பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
அந்த வகையில், திரைப்பட நடிகர் சகோதரர் சூரி மற்றும் மதுரை அம்மன் உணவகம் சார்பில் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ‘தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி’-க்கு இன்று நம்மிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்" என குறிப்பிட்டுள்ளார்.