படத்துக்கு 20 பேர் கூட வரல; நான் உயிரோடு இருக்க மாட்டேன் - வேதனையில் நடிகர் திடீர் மாயம்!
திரைப்படம் சரியாக ஓடவில்லை என்பதால் உருக்கமான வீடியோவை பதிவிட்டு நடிகர் திடீரென மாயமாகியுள்ளார்.
மாயமான நடிகர்
கிருஷ்ணகிரி மாவட்டம் அடுத்த சென்னசந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (40). இவர் ‘பூ போன்ற காதல்’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் இவரே இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் ஆகியவற்றையும் எழுதியுள்ளார்.
இந்த படம் சமீபத்தில் வெளியாகியுள்ளது. ஆனால் படம் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. மேலும், படம் ஓடவில்லை என்பதால் மன உளைச்சல் அடைந்து வேதனையில் இருந்த சுரேஷ் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியேறினார். பின்னர் சுரேஷ் வீடு திரும்பவில்லை என்பதால், அவரின் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனாலும் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.
சுரேஷின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு விடுதியில் அவர் தங்கியிருப்பது குடும்பத்தினருக்கு தெரியவந்தது. உடனடியாக அங்கு சென்று பார்த்தபோது, சுரேஷ் அந்த விடுதியிலிருந்து வெளியேறி வேறு இடத்திற்கு சென்றுவிட்டார் என்பது தெரியவந்தது. இதுகுறித்து அவரின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே சுரேஷ் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
போலீசார் விசாரணை
அதில் அவர் பேசியதாவது "எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள். இந்த படத்தை முடிக்க சென்சார் சான்றிதழ் வாங்க ரூ.5 லட்சம் கடன் வாங்கினேன். இப்போது கடன் பிரச்சினை எனக்கு உள்ளது. இந்தப் படத்தை நம்பி தான் நான் இருந்தேன். ஆனால் 20 டிக்கெட் கூட வரவில்லை.
இப்படியே சென்றால் கண்டிப்பாக என்னால் உயிர் வாழ முடியாது. ஏராளமானோரிடம் கடன் வாங்கி உள்ளோம். அவர்கள் உதவி செய்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றி. நாளை நான் கண்டிப்பாக உயிரோடு இருக்க மாட்டேன். நான் உயிரோடு இருக்க வேண்டும் என்றால் எனக்கு உதவி செய்ய வேண்டும். நான் சாவதற்கு முன்பு இந்த செய்தியை போட்டால் இந்தபடத்தை பார்க்க எப்படியும் 100 பேர் வருவார்கள்.
அப்போதுதான் எனது பிரச்சினை கொஞ்சம், கொஞ்சமாக தீரும். அப்படி இல்லையென்றால் நாளை நான் உயிரோடு இருக்க மாட்டேன். நிறைய பேரை கஷ்டப்படுத்தி விட்டேன். இது போன்று யாரும் படம் எடுக்காதீர்கள். நிறைய பணம் இருந்தால் மட்டும் படம் எடுங்கள்” என்று பேசியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த சுரேஷின் நண்பர்கள், அவரின் குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.