நடிகர் அர்ஜூன் மகள் திருமணம்; சம்பந்தியுடன் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து அழைப்பு!
நடிகர் அர்ஜூன் தனது மகள் திருமணத்திற்கு முதல்வர் ஸ்டாலினை நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார்.
அர்ஜூன் மகள்
தமிழ் சினிமாவில் ’ஆக்ஷன் கிங்’ என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் அர்ஜூன். அவரது மகளும் நடிகையுமான ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தம்பி ராமையாவின் மகன், நடிகர் உமாபதிக்கும் திருமணம் விரைவில் நடக்க இருக்கிறது. கடந்த நவம்பர் மாதம் இருவருக்கும், அர்ஜூனுக்கு சொந்தமான ஆஞ்சநேயர் கோவிலில் நண்பர்கள்,
உறவினர்கள் சூழ மிகவும் எளிமையான முறையில் இந்த நிகழ்வு நடந்து முடிந்தது. முன்னதாக அர்ஜூன் தொகுத்து வழங்கிய ‘சர்வைவர்’ நிகழ்ச்சி மூலம் ஐஸ்வர்யாவுக்கு அறிமுகமானவர் உமாபதி. நிகழ்ச்சியின் மூலமாகவே பழக்கம் ஏற்பட்ட நிலையில்,
திருமண அழைப்பு
உமாபதியின் நற்குணம் அர்ஜூனுக்குப் பிடித்துப் போக தனது வீட்டு மாப்பிளையாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். அவரது மகள் ஐஸ்வர்யாவும் விஷாலுடன் 'பட்டத்து யானை’ உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். இதையடுத்து திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிக்கக் கூடாது என தம்பி ராமையா குடும்பம் கேட்டுக் கொண்டதாக தகவல் பரவியது.
ஆனால் இது குறித்து ஐஸ்வர்யா இன்னும் தெளிவுப்படுத்தவில்லை. இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்து ஆறு மாதங்களான நிலையில் திருமணம் எப்போது என்று ரசிகர்கள் கேட்டு வந்தனர்.
இந்த சூழலில் திருமண ஏற்பாட்டினைத் தடபுடலாகத் தொடங்கி இருக்கிறது இரண்டு குடும்பமும். முதல்வர் ஸ்டாலினை முகாம் அலுவலகத்தில் இன்று நடிகர் அர்ஜுன் மற்றும் உமாபதி ராமையா ஆகியோர் தங்களது குடும்பத்தினருடன் நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை கொடுத்துள்ளனர்.