மீட்பு பணியில் இருந்த போலீசார் மீது வேன் மோதியதில் இரண்டு காவலர்கள் உயிரிழப்பு
ராசிபுரம் அருகே விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீது வேன் மோதி விபத்தில் 2 காவலர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சாலை விபத்து
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அணைப்பாளையம் பிரிவு சாலையில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.
இதையடுத்து இணைப்புச் சாலை அமைக்கப்பட்டு வாகனங்கள் அதன் வழியே செல்கின்றன. இந்த நிலையில் திருநெல்வேலியிலிருந்து ஓசூருக்கு சென்ற கார் இணைப்புச் சாலை அருகே வைக்கப்பட்டிருந்த இரும்பு டேங்கின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
தகவல் அறிந்து வந்த ராசிபுரம் மற்றும் புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி விசாரித்துள்ளனர்.
போலீசார் உயிரிழப்பு
அப்போது லாரியின் பின்னால் நின்று கொண்டிருந்த போலீசார்கள் மற்றும் லாரியின் மீது, திருநள்ளாரில் இருந்து சேலம் மாவட்டம் இளம்பிள்ளைக்கு சென்ற சுற்றுலா வேன் ஒன்று அதிவேகமாக வந்து மோதியது.
இதில் புதுச்சத்திரம் போலீஸ் நிலைய சிறப்பு-காவல் ஆய்வாளர் சந்திரசேகர், ராசிபுரம் போலீஸ் நிலைய காவலர் தேவராஜன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
காவலர் தேவராஜன் (வயது 37) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் சிறப்பு காவல் ஆய்வாளர் சந்திரசேகர் (55) மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
அதேபோல் இந்த விபத்தில் மற்றொரு காவலர் மணிகண்டன் மற்றும் சுற்றுலா வேனில் பயணம் செய்த 3 பேரும் காயமடைந்தனர்.
அவர்கள் 4 பேரும் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி, ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று விபத்தில் பலியான காவலர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தினார்.
கருமுட்டை விற்பனை விவகாரம் - தனியார் மருத்துவமனை மருத்துவர்களிடம் துருவி துருவி விசாரணை..!