காதலிப்பது பற்றி தவறாக பேசிய அக்கம் பக்கத்தினர்... இளம்பெண் எடுத்த விபரீத முடிவு

namakkal loveissue younggirlsuicide
By Petchi Avudaiappan Apr 04, 2022 03:58 PM GMT
Report

நாமக்கல் அருகே  காதலிப்பது குறித்து அக்கம் பக்கத்தினர் தவறாக பேசியதால் இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள  வெண்ணந்தூர் நரிகள் கரடு பகுதியைச் சேர்ந்த ராஜு - செல்லம்மாள் தம்பதியரின் மகள் அஞ்சலை என்பவர் கடந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு முடித்த நிலையில் தற்போது வீட்டில் இருந்து வருகிறார்.

இதனிடையே 2 ஆண்டுகளாக அதே பகுதியைச் சேர்ந்த உறவுப்பையனான சூர்யா என்பவரை காதலித்து வந்துள்ளார். இது இருவீட்டாருக்கும் தெரியவந்ததை தொடர்ந்து ராஜூ வீட்டுக்குச் சென்று பெண் கேட்டுள்ளனர். அப்போது ஆறு மாதத்திற்குப் பிறகு திருமணம் செய்து வைப்பதாக பெண் வீட்டார் கூறியுள்ளனர்.

இதற்கிடையில் அஞ்சலை காதலிப்பது குறித்து அக்கம்பக்கத்தினர் தவறாக பேசியதாக சொல்லப்படுகிறது. இதனைக் கேட்டு மனமுடைந்த அஞ்சலை தன் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்றும், காதலன் சூர்யாவை தண்டிக்கக் கூடாது. நான் உண்மையானவள். பெற்றோர்கள் தான் முக்கியம் என நினைப்பவள். அக்கம் பக்கத்தில் என்னை தவறாக கூறியது போல் நான் கிடையாது. நான் நல்லவள்’ என கடிதம் எழுதி வைத்துவிட்டு அருகில் உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலைச் செய்துக் கொண்டார். 

கிணற்றில் குதிக்கும் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ராசிபுரம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிதனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் வெண்ணந்தூர் காவல்துறையினர் அஞ்சலையை சடலமாக மீட்டனர்.

பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அஞ்சலை எழுதிய கடிதத்தை கைப்பற்றிய வெண்ணந்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.