இந்தமுறையும் வாய்ப்பு கிடைக்கல; குமுறிய அபிமன்யு - கம்பீர் சொன்ன வார்த்தை!
அபிமன்யு இந்திய அணியில் இடம்கிடைக்காமல் போராடி வருகிறார்.
அணியில் வாய்ப்பில்லை
இந்திய அணியில் இடம்பெறும் அபிமன்யு ஈஸ்வரனுக்கு 5 ஆண்டுகளாக இன்னும் ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை. 2021 முதல் இந்திய அணியுடன் பயணித்து வருகிறார்.
முதல் தர கிரிக்கெட்டில் 103 போட்டிகளில் விளையாடியிருக்கும் அபிமன்யு ஈஸ்வரன் 48.70 சராசரியுடன் 7841 ரன்களை குவித்துள்ளார். அதில் 27 சதங்களும், 31 அரைசதங்களும் அடங்கும். 16 முறை நாட் அவுட்டில் இருந்திருக்கும் அவருடைய அதிகபட்ச ஸ்கோர் 233.
கடந்த 2018ஆம் ஆண்டு ரஞ்சி டிராபியில் 6 போட்டிகளில் 861 ரன்கள் குவித்தபிறகு, இந்தியா ஏ அணியில் இடம்பிடித்தார். பின், துலீப் டிராபியில் இந்தியா ரெட் டீமில் இடம்பிடித்தார். 2021ல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவின் பேக்கப் தொடக்கவீரராக இடம்பெற்றிருந்தார்.
அபிமன்யு தந்தை தகவல்
அதே ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் இடம்பிடித்திருந்தார். இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியின் ஸ்குவாடில் இடம்பிடித்தார். இதுகுறித்து அவரது தந்தை ரங்கநாதன் பரமேஸ்வரன் ஒரு பேட்டியில்,
"இங்கிலாந்து தொடரில் வாய்ப்பு கிடைக்காததால் அபிமன்யு மிகவும் வருத்தமடைந்தார். 'அப்பா, எனக்கு இன்னும் இடம் கிடைக்கவில்லை' என்று என்னிடம் போனில் வருத்தப்பட்டார்" என்று கூறினார். மேலும், "கம்பீர் என் மகனிடம், 'நீ சரியான பாதையில்தான் பயணிக்கிறாய்.
உனக்கான வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும். அதுவும் நீண்டகால வாய்ப்பாக இருக்கும். ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் சோபிக்கவில்லை என்பதற்காக உன்னை அணியை விட்டு நீக்க மாட்டேன்' என்று உறுதியளித்துள்ளார்," என்றார்.