இன்ஸ்டாகிராம் ஐடி-யுடன் அம்மன்களுக்கு வினோத ஆதார் கார்டு - திருவிழாவில் சுவாரஸ்யம்!
திருவிழாவையொட்டி அம்மனுக்கு ஆதார் கார்டுடன் வைக்கப்பட்டிருந்த பேனர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
வினோத பேனர்
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே பொம்மணம்பட்டி கிராமத்தில் பழமை வாய்ந்த காளியம்மன், பகவதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த 22-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த திருவிழாவையொட்டி அந்த கோவிலில் வைக்கப்பட்டிருந்த பேனர் ஒன்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. பக்தர்கள் சார்பில் வைக்கப்பட்டுள்ள அந்த பேனர் ஆதார் அட்டை போல் இடம்பெற்றிருந்தது.
ஆதார் அட்டை
காளியம்மன், முத்தாலம்மன், கன்னிமார், பகவதியம்மன், வெற்றி விநாயகர், நாகம்மாள் ஆகிய 6 தெய்வங்களின் படத்துடன் கூடிய ஆதார் அட்டைகளை ஒருங்கிணைத்து அந்த பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதில், தெய்வங்களின் பிறந்த தேதியில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட வருடம் குறிப்பிடப்பட்டு இருந்தது.
மேலும், வட்டம், மாவட்டம், ஆதார் எண், இன்ஸ்டாகிராம் ஐடி, பார்கோடு மற்றும் ஆதாரம் எங்க ஊரு, எங்க ராஜ்ஜியம் என்று அச்சிடப்பட்டு இருந்தது. ஆதார் போல் இடம் பெற்றிருந்த இந்த வினோத பேனர் திருவிழாவுக்கு வந்த பக்தர்களின் கவனத்தை ஈர்த்தது.