சபரிமலை செல்லும் பக்தர்களே.. இனி இது கட்டாயம்; திடீர் அறிவிப்பு - அவசியம் தெரிஞ்சுக்கோங்க!
சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சபரிமலை
சபரிமலை மண்டல, மகர விளக்கு சீசன் நவம்பர் 16ல் துவங்குகிறது. இதற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.
இந்நிலையில் நடப்பு மண்டல-மகர விளக்கு சீசன் குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் பத்தனம்திட்டாவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 70,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் 10,000 பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்படும். இதற்காக பம்பை, எருமேலி, வண்டிப் பெரியார் (சத்ரம்) ஆகிய இடங்களில் முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. சபரிமலை வரும் அனைத்து பக்தர்களுக்கும் ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
ஆதார் கட்டாயம்
சபரிமலை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவிற்கு இதுவரை 35 சதவீதம் பேர் முன்பதிவு செய்து உள்ளனர். முன்பதிவு செய்த அய்யப்ப பக்தர்கள் தங்களது முன்பதிவை ரத்து செய்தால் அந்த தரிசன காலி இடத்திற்கு ஏற்ப உடனடி முன்பதிவின்படி கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
நடப்பு மண்டல சீசனையொட்டி தினசரி 18 மணி நேர தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதாவது, தினசரி அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து மதியம் 1 மணிக்கு அடைக்கப்படும். மீண்டும் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.
சன்னிதானம்-பம்பை இடையேயான ரோப் கார் இணைப்பு திட்ட பணிகளை நடப்பு சீசனிலேயே தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது." எனத் தெரிவித்துள்ளார்.