சபரிமலை பக்தர்களுக்கு.. எதிர்பாராத வகையில் உயிரிழந்தால் ஆயுள் காப்பீடு - விவரம்!
எதிர்பாராத வகையில் உயிரிழந்தால் சபரிமலை பக்தர்களுக்கு ஆயுள் காப்பீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
பக்தர்கள் யாத்திரை
கேரளா, பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரபலம். இங்கு மண்டல மற்றும் மகர விளக்குபூஜை காலத்தில் ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் யாத்திரை மேற்கொள்கின்றனர்.
இந்த யாத்திரையின்போது, விபத்து, உடல்நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் சிலர் உயிரிழக்கின்றனர். இதுகுறித்து தற்போது ஐயப்பன் கோயிலை நிர்வகிக்கும் திருவாங்கூர் தேவசம் வாரிய (டிடிபி) தலைவர் பி.எஸ்.பிரசாந்த் பேசுகையில்,
ஆயுள் காப்பீடு
சபரிமலைக்கு வரும் பக்தர்கள்தரிசனத்துக்காக இணையவழியில் முன்பதிவு செய்யும்போதே ரூ.10(ஒரு முறை பிரீமியம்) கூடுதலாக செலுத்தி காப்பீடு பெற்றுக் கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இது வரும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்கான யாத்திரையின்போது அமலுக்கு வரும்.
இந்த திட்டத்தில் காப்பீடு செய்தவர்கள் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தால், அவருடைய குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம்காப்பீடு வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு எவ்வளவு நிவாரணம் வழங்குவது என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
சத்திரம்-புள்ளமேடு வழித்தடம் மற்றும் எருமேலி மலைப் பாதைஉட்பட அனைத்து யாத்திரை பகுதியிலும் பாதிக்கப்படுவோருக்கு இந்த காப்பீடு பொருந்தும் எனத் தெரிவித்துள்ளார்.