அன்மோல் பிஷ்னோய் குறித்து துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானம் - NIA அதிரடி!
அன்மோல் பிஷ்னோய் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளது.
மும்பை
மும்பை பாந்த்ராவில் கடந்த அக்.,12ம் தேதி இரவு மஹாராஷ்டிரா முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான பாபா சித்திக் மூன்று நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது .
இந்த கொலை சம்பவம் தொடர்பாக குர்மைல் பல்ஜித் சிங், தர்ம ராஜ் ராஜேஷ், காஷ்யப் உள்ளிட்ட 4 பேரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் பாபா சித்திக் கொலைக்குக் காரணம் குஜராத் சிறையில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் தான் விசாரணையில் தெரியவந்தது.
குறிப்பாக, லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் பிஷ்னோயிக்கும் இந்தக் கொலையில் தொடர்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த நிலையில், பானு எனப்படும் அன்மோல் பிஷ்னோய் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளது
10 லட்சம் சன்மானம்
இவர் மீது 18 வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த 2022ல் பஞ்சாப் பாடகர் சித்து மோசேவாலா கொலை வழக்கில் அன்மோல் பிஷ்னோய் தேடப்பட்டு வருகிறார். கடந்த ஏப்ரல் 14ம் தேதி நடிகர் சல்மான் கான் வீட்டின் வெளியே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மும்பை காவல்துறையால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டார்.
தொடர்ந்து பல்வேறு வழக்குகளில் தலைமறைவாக இருந்து வரும் அன்மோல் பிஷ்னோய், போலி பாஸ்போர்ட் மூலம் கடந்த ஆண்டு கென்யாவுக்கு தப்பியோடிய நிலையில், தற்போது கனடாவில் தஞ்சம் புகுந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.