இலங்கையிலிருந்து தனுஷ்கோடி வந்த 8 பேர் - தண்ணீர் கொடுத்து தாகம் தீர்த்த தமிழக போலீசார்
இலங்கையிலிருந்து தாகத்தோடு அகதிகளாக வந்த 8 பேருக்கு தமிழக காவல்துறை அதிகாரி தண்ணீர் கொடுத்து தாகம் தீர்த்தார்.
தனுஷ்கோடி வந்த 8 பேர்
இலங்கையில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்டுள்ள பொருளதார நெருக்கடியால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து இலங்கையிலிருந்து மக்கள் அகதிகளாக தமிழகத்திற்கு வருகின்றனர்.
இன்று ராமேஸ்வரம் அரிச்சல் முனை பகுதிக்கு 5 சிறுவர்கள் உள்பட 8 பேர் சட்டவிரோதமாக வருவதாக தமிழக கடலோர காவல் படைக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் பேரில் அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த தமிழக கடலோர காவல் படையினர் அகதிகளாக வந்த 5 சிறுவர்கள், பெண்கள் உள்பட 8 பேரை மீட்டு தமிழக போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தாகம் தீர்த்த போலீஸ்
அப்போது சிறுவர்கள் கடும் தாகத்தோடு இருந்ததை அறிந்த தமிழக காவல்துறை அதிகாரி ஒருவர் அந்த சிறுவர்களுக்கு உடனடியாக தண்ணீர் கொடுத்து தாகம் தீர்த்தார்.

அதன் பின்னர் அவர்களை மண்டபம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மன்னார் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் சசிகுமார் (வயது 30), இவரது மகன் மோஹித் (7), மகள் சுபிஸ்கா(9), யாழ்பாணம் பகுதியை சேர்ந்த வசந்தகுமார் மனைவி ஜெயந்தினி (30), மகள் இனியா (10), மகன்கள் ஹரி ஹரன்(9), தனுசன் (4) மற்றும் மன்னார் பகுதியை சேர்ந்த தேவராஜ் மனைவி இந்துமதி(65) என தெரியவந்தது.
மேலும் போலீசார் விசாரணையில் அவர்கள் இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் பிழைப்பதற்கு வழியில்லாமல் இருந்து வந்ததாகவும், தலா ஒரு லட்சம் கொடுத்து கள்ளத்தோணி மூலம் தலைமன்னார் கடல் பகுதிக்கு வந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தனுஷ்கோடியில் மயங்கிய நிலையில் இலங்கை தம்பதி! கண்ணீர் பேட்டி