அடடே..வானில் நிகழப்போகும் அதிசயம்; ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள் - எப்போது தெரியுமா?
ஜூன் முதல் வாரத்தில் 6 கோள்களை ஒரே நேர்கோட்டில் காணமுடியும்.
வானில் அதிசயம்
இந்த பிரபஞ்சம் முழுவதும் பல விதமான விசித்திரங்களும் அதிசயங்களும் நிறைந்தது என்று கூறலாம். இந்த பிரபஞ்சம் நாள்தோறும் விஞ்ஞானிகளை திகைக்க வைத்து ஆச்சர்யத்தில் மூழ்கடித்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில், ஜூன் முதல் வாரத்தில் 6 கிரகங்களை ஒரே நேர்க்கோட்டில் காணக்கூடிய வாய்ப்பு வரும்
என வானியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதாவது, ஜூன் 3-ந் கிழக்கு திசையில் சூரிய உதயத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக, வியாழன், புதன், யுரேனஸ், செவ்வாய், நெப்டியூன், சனி என்ற வரிசையில், 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் வருவதை, பூமியில் இருந்து பார்க்கலாம் என்று சொல்லப்படுகிறது.
6 கோள்கள்
அதில் யுரேனஸ், நெப்டியூன், புதன் ஆகிய கோள்கள் சற்று தொலைவாக இருப்பதால் பைனாகுலர் மூலமோ அல்லது டெலஸ்கோப் மூலமாகவோ தெளிவாக பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளனர். பொதுவாக சூரிய குடும்பத்தில் சூரியன் - பூமி - சந்திரன் ஒரே நேர்கோட்டில் வருவதை நாம் ஆண்டுதோறும் கிரகணம் என்று கூறுகிறோம்.
அதேபோல் ஜூன் 3 மற்றும் 4-ந் தேதிகளில் அதிகாலையில் 6 கோள்களும் ஒரே நேர்க்கோட்டில் வரும் இந்த நிகழ்வானது வானில் கிரகங்களின் அணிவகுப்பு என்று ஆராய்ச்சியாளர்களால் வர்ணிக்கப்படுகிறது. இந்த நிலையில், சென்னையில் உள்ள பிர்லா கோளரங்கம் இது தொடர்பாக கூறியிருப்பது,
வரும் ஜூன் 3 மற்றும் 4-ம் தேதிகளில் 6 கோள்கள் நேர்கோட்டில் வரும் நிகழ்வை நாம் வெறும் கண்களால் பார்க்கலாம். மேலும் தொலைநோக்கி உதவியுடன் பார்ப்பதற்கு இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் இந்த அரிய நிகழ்வை காணலாம் என்று தெரிவித்துள்ளனர்.