இலவச தரிசன டிக்கெட்.. கூட்ட நெரிசல் சிக்கி 6 பேர் பலி - திருப்பதியில் நடந்த கோர சம்பவம்!
திருப்பதி கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பதி
பூலோக வைகுண்டம் என்று அழைகப்படும் திருப்பதி ஏழுமலையான் கோயில் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிநாடுகளைச் சேர்ந்த லட்சக்காண பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இந்த நிலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க வாசல் 10 ஆம் தேதி திறக்கபட உள்ளது. இதற்காக இலவச தரிசன டோக்கன் விநியோகிக்கப்படும் எனத் திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்து இருந்தது.
இதற்காக பல்வேறு இடங்களில் 90 கவுண்டர்கள் அமைக்கப்பட்டு டோக்கன் இன்று (ஜன.9) அதிகாலை 5 மணி முதல் விநியோகிக்கப்பட இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு முதலே இலவச தரிசன டிக்கெட்டை பெற 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கவுண்டர்களில் திரண்டிருந்தனர்.
கூட்ட நெரிசல்
அப்போது விஷ்ணு நிவாசம், பைரகிபட்டேடா, ராமச்சந்திர புஷ்கரிணி உள்ளிட்ட கவுண்டர்களில் 4000 ஆயிரத்திற்கு அதிகமானவர்கள் காத்திருந்தனர். அப்போது அவர்களை வரிசையில் செல்ல அனுமதித்த போது முண்டியடித்துக் கொண்டு சென்றனர். கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.
இதில் 2 பேர் தமிழ் நாட்டை சேர்ந்தவர். சுமார் 30-க்கும் மேற்பட்டோருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. சுமார் 30 க்கும் மேற்பட்டோர் திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அந்த பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் முறையாக இல்லை என குற்றச்சாட்டி எழுந்து வருகிறது. இந்த சம்பவத்திற்கு ராகுல் காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.