சாலையில் சிதறிய ரூ.500 நோட்டுகள்; அள்ளிய பொதுமக்கள் - என்ன நடந்தது..?
சாலையில் 500 ரூபாய் நோட்டுகள் சிதறிக் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.500 நோட்டுகள்
மதுரை மாவட்டம் மாமரத்துபட்டி விலக்கு பகுதியில் 100 மீட்டர் தொலைவிற்கு 500 ரூபாய் நோட்டுகள் நெடுஞ்சாலையெங்கும் சிதறிக் கிடந்தது. இதனை அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் அப்பகுதியில் இருந்தவர்கள் என அனைவரும் அள்ளி சென்றனர்.
சாலையில் 500 ரூபாய் நோட்டுகள் சிதறிக் கிடக்கும் தகவல் பரவியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணை
மேலும், அவ்வழியாக வந்த வாகனத்திலிருந்து சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகள் தவறி விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த பணம் குறித்து இதுவரை யாரும் புகார் அளிக்கவில்லை.
அப்படியே புகார் அளித்தாலும் பொதுமக்கள் எடுத்துச் சென்ற பணத்தை திரும்பப் பெற முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தற்போது பொதுமக்கள் அந்த பணத்தை எடுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.