செங்கல்பட்டில் பயங்கரம் - பேருந்து படிக்கட்டில் பயணித்த 4 மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!
பேருந்தில் கன்டெய்னர் லாரி உரசி விபத்துக்குள்ளானதில், படிக்கட்டில் பயணித்த 4 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர்.
கோர விபத்து
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியொன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் படிக்கும் சில மாணவர்கள் தனியார் பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்தனர்.
இந்த பேருந்து மேல்மருவத்தூர் அருகே சென்றுகொண்டிருந்தபோது, அருகில் வந்த ஒரு வாகனம் பேருந்தை முந்திச்செல்ல முயன்றுள்ளது. இதனால் பேருந்து ஓட்டுநர் இடது பக்கமாக பேருந்தை திருப்பியுள்ளார்.
4 பேர் உயிரிழப்பு
அப்போது இடப்பக்கமாக வந்த கண்டெய்னர் லாரி, பேருந்தின் மீது உரசியதில், படியில் தொங்கிக் கொண்டிருந்த மாணவர்களை வாகனம் நசுக்கியுள்ளது. இதில் 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும், படுகாயமடைந்த 5-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த மாணவர்களில் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த கோர சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.