காணாமல்போன கத்தரிக்கோல்; ரத்து செய்யப்பட்ட விமானங்கள் - பயணிகள் கலக்கம்!
கத்தரிக்கோல் ஒன்று காணாமல் போனதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாயமான கத்தரிக்கோல்
ஜப்பான், கொக்கைடோவின் நியூ சிட்டோஸ் விமான நிலையத்தின் உள் நுழையும் வாயிலின் அருகே கடைகள் அமைந்துள்ளன. அங்கு கடை ஒன்றில் கத்தரிக்கோல் காணாமல் போகியுள்ளது.
இதனால் பாதுகாப்பு கருதி உடனே 36 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. 201 விமான சேவைகள் தாமதமடைந்துள்ளன. மேலும், விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் பாதுகாப்பு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
விமானங்கள் ரத்து
விமான நிலைய ஓய்வறையில் இருந்த பயணிகள் மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் பெரும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அந்த கடையில் ஒரு தொழிலாளியால் கத்தரிக்கோல் கண்டுபிடிக்கப்பட்டதாக கொக்கைடோ விமான நிலையம் அறிவித்தது.
பின் காணாமல் போன கத்தரிக்கோலும் இதுவும் ஒன்றுதான் என்பதை உறுதிப்படுத்தும் வரை அறிவிப்பை வெளியிடுவதை நிறுத்தி வைத்திருந்ததாக அதிகாரிகள் விளக்கினர்.
தற்போது இவ்வாறு மீண்டும் நடைபெறாமல் தடுக்குமாறு நிலம், உட்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் சுற்றுலா அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.