சென்னை சுங்கத்துறை தேர்வில் முறைகேடு; காதில் ப்ளூடூத், இடுப்பில் சிம் - சிக்கிய 30 வடமாநிலத்தவர்!
சென்னையில் நடைபெற்ற சுங்கத்துறை தேர்வில் நூதன முறையில் முறைகேட்டில் ஈடுபட்ட 30 வடமாநிலத்தவர் சிக்கியுள்ளனர்.
சுங்கத்துறை தேர்வு
சென்னை சுங்கத்துறையில் காலியாக இருந்த எழுத்தர், உணவக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிகளுக்கான எழுத்துத் தேர்வு நேற்று சென்னை ராஜாஜி சாலையில் உள்ள சுங்கத் துறை அலுவலகத்தில் நடைபெற்றது. நடைபெற்றது.
இந்த தேர்விற்கு 12,000 பேர் விண்ணப்பித்த நிலையில், தகுதியுடைய 1,600 பேர் தேர்வு எழுதினர். தேர்வு தேர்வு தொடங்கிய சிறிது நேரத்தில் சில இளைஞர்கள் சந்தேகத்திற்குரிய வகையில் செயல்பட்டுள்ளனர். இதனை கவனித்த தேர்வு கூட கண்காணிப்பாளர், இளைஞர் ஒருவரிடம் விசாரணை செய்தார்.
அப்போது அந்த இளைஞர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால் அவரை சோதனை செய்தனர். அப்போது அந்த நபரின் காதில் மிகச் சிறிய அளவிலான 'ப்ளூ டூத்' கருவி பொருத்தியிருந்ததும், வயிற்றுப்பகுதியில் 2 சிம்கார்டுகளுடன் சிறிய கைப்பேசி வடிவிலான கருவி இருந்ததும் தெரியவந்தது.
தேர்வு மோசடி
ப்ளூடூத் மூலம் வெளியிலிருந்து ஒருவர் கேள்விக்குரிய பதிலை கூறியவுடன், இளைஞர் விடைத்தாளில் பதிலை எழுதி தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும் நடத்திய விசாரணையில் அங்கு தேர்வு எழுதியவர்களில் 30 பேர் இத்தகைய முறைகேட்டில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து வெளியிலிருந்து ப்ளூடூத் மூலம் பதிலை கூறிய கும்பலை சுங்கத்துறை அதிகாரிகள் பிடிக்க முயன்றபோது, அவர்கள் தப்பியோடியுள்ளனர். பின்னர் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 30 பேரும் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
பிடிபட்ட 30 பேரில், 26 பேர் ஹரியானா, 2 பேர் உத்திர பிரதேசம், 2 பேர் வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.