பெரியார் சொன்ன இந்த வார்த்தையை பின்பற்றுவது 2k கிட்ஸ் தான் - பாராட்டிய உதயநிதி ஸ்டாலின்
பெரியாரின் வார்த்தைகளை 2கே கிட்ஸ் மிகச்சிறப்பாக பின் தொடர்வதாக உதயநிதி ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்
சென்னையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு 2025 என்ற திட்டத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அதில் பேசிய அவர்,
கல்வி மட்டும்தான் மாணவர்களின் வாழ்க்கையை மாற்றும். இந்தியாவில் அதிகம் பேர் உயர்கல்வி படிக்கும் மாநிலமாக தமிழ்நாடு மாறி இருக்கிறது. நாட்டின் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் சதவிகிதம் 29 மட்டும்தான். அது தமிழ்நாட்டில் 52 சதவிகிதமாக உள்ளது.
2கே கிட்ஸ்களுக்கு அட்வைஸ் செய்தால் பிடிக்காது என்று தெரியும். தந்தை பெரியார் அடிக்கடி ஒன்றை சொல்வார்கள். யார் எதை சொன்னாலும், அதனை எப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடாது. ஏன், எதற்கு, எப்படி என்று கேள்வி கேட்க வேண்டும். அப்படி கேள்வி கேட்ட பின், உன்னுடைய பகுத்தறிவிற்கும், அறிவிற்கும் எட்டினால் மட்டும் ஏற்றுக் கொள் என்று கூறுவார்.
கல்வியின் முக்கியத்துவம்
தந்தை பெரியாரின் வார்த்தைகளை யார் பின்தொடர்கிறார்களோ இல்லையோ, இங்குள்ள Gen Z இளைஞர்கள் அதிகமாகவே பின் தொடர்கிறார்கள். அந்த அளவிற்கு இந்த கால இளைஞர்கள் அறிவுடனும், ஆற்றலுடன் இருக்கிறார்கள்.
பள்ளிக் கல்வியை முடித்து, உயர்கல்விக்கு செல்லப் போகிறீர்கள். உங்களுக்கு பத்திரமான எதிர்காலத்தை அமைத்து கொடுப்பதே கல்லூரி கனவு திட்டம். பள்ளிக்கல்வியின் போது 10 மற்றும் 12 ஆகிய தேர்வு முடிவுகள் தான் வாழ்க்கையை முடிவு செய்யும் என்று பெற்றோர், ஆசிரியர்கள் என்று அனைவரும் கூறுவார்கள்.
கல்வி மட்டுமே வாழ்க்கையை மாற்றுவதற்கான ஒரே புள்ளி. 100 ஆண்டுகளுக்கு முன் பள்ளிக்கூட வாசலை மிதித்திருக்க மாட்டார்கள். இன்று லட்சக்கணக்கானோர் உயர்கல்வி செல்லப் போகிறோம். இன்று பள்ளிக்கல்விக்கும், உயர்கல்விக்கும் ஏராளமான திட்டங்களை அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழ்ப்புதல்வன், புதுமைப் பெண் திட்டம் மூலமாக மாதம் ரூ.1,000 ஊக்கத்தொகை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.