மகளிருக்கு வழங்குவது போல்.. மாதந்தோறும் ரூ.2000 அம்மனுக்கு உரிமை தொகை - அரசு அறிவிப்பு!
உரிமை தொகை மாதந்தோறும் அம்மனுக்கு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
உரிமை தொகை
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின்போது காங்கிரஸ் வெற்றி பெற்றால் க்ருஹ லட்சுமி திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து கடந்த 30-ம் தேதி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
இந்த திட்ட தொடக்க விழாவையொட்டி முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் சாமுண்டிமலைக்கு சென்று சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு தலா ரூ.2 ஆயிரம் காணிக்கையாக வழங்கியிருந்தனர்.
அறிவிப்பு
இந்நிலையில், மைசூருவை சேர்ந்த காங்கிரஸ் எம்எல்சி தினேஷ் கோலிகவுடா கடிதம் ஒன்றை துணை முதல்வரிடம் வழங்கினார். அதில், "குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.2,000 உதவித் தொகையை பெண் தெய்வமான சாமுண்டீஸ்வரி அம்மனுக்கும் வழங்க வேண்டும்.
அவர் கர்நாடகாவில் உள்ள அனைத்து குடும்பங்களின் தலைவியாக இருக்கிறார். எனவே, அவரையும் க்ருஹ லட்சுமி திட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.
இந்த கோரிக்கை கடிதத்தை ஏற்றுக்கொண்ட துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், உடனே இந்த கோரிக்கையை நிறைவேற்றும்படி கர்நாடக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி லட்சுமி ஹெப்பால்கருக்கு உத்தரவிட்டுள்ளார்.