மூடநம்பிக்கையின் உச்சம்; 2 நாள் கங்கையில் மிதந்தபடி இளைஞர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
பாம்பு விஷம் நீங்க இளைஞர் ஒருவர் கங்கை நதியில் மிதக்க வைத்த சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.
மூடநம்பிக்கை
மக்களுக்கு காலம் காலமாக மூடநம்பிக்கை மீது கொண்டுள்ள பற்றுக்கு பஞ்சமே இருந்தது இல்லை. நிர்வாண பூஜை செய்தால் செல்வம் கிடைக்கும், நரபலி கொடுத்தால் புதையல் கிடைக்கும், தலைப்பிள்ளையை பலி கொடுத்தால் செல்வம் பெருகும் என்ற மூட நம்பிக்கையை நம்பி பல பலிகள் அரங்கேறியுள்ளது.
அதே போல உடலில் ஏதேனும் பிரச்சனனை என்றால் கங்கை நதியில் நீராடினால் சரியாகும் என்ற மூடநம்பிக்கை பரவலாக பின்பற்ற படுகிறது. அந்த வகையில், பாம்பு கடித்த விஷத்தில் இருந்து குணமடைய இளைஞர் ஒருவரை இரண்டு நாட்களாக கங்கை நதியில் கட்டி வைத்து மிதக்க வைத்த சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.
இளைஞர் உயிரிழப்பு
உத்தரபிரதேசத்தின் ஜஹாங்கிராபாத் பகுதியை சேர்ந்தவர் மோகித் (20). இவர் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்த வந்தார். தேர்தலில் வாக்கு செலுத்துவதற்காக கடந்த வாரம் வீடு திரும்பியுள்ளார். அப்போது வயலுக்கு சென்ற அவரை பாம்பு கடித்துள்ளது. உடனே அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
ஆனால் மருத்துவத்தை விட கங்கை நதியில் உடலை வைத்தால் விஷம் இறங்கிவிடும் என்று சிலர் கூறிய மூடநம்பிக்கையை நம்பி அப்படியே செய்துள்ளனர். சுமார் 2 நாட்கள் கங்கை நீரில் மிதந்த இளைஞரின் உடலில் பாம்பு விஷம் ஏறி அவர் உயிரிழந்துள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் இளைஞரின் உடலை அப்பகுதி மக்கள் மீட்டனர்.
மேலும் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கங்கை நீரில் உடலை வைப்பதால் விஷம் நீங்கும் என்ற மூடநம்பிக்கையால் இளைஞரின் உயிர் பறிபோன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.