ஆம்புலன்ஸ் வரமறுத்ததால் உயிரிழந்த மகனின் உடலை தன் தோளில் சுமந்து சென்ற தந்தை...!
ஆம்புலன்ஸ் வரமறுத்ததால் உயிரிழந்த மகனின் உடலை தன் தோளில் சுமந்து சென்ற தந்தையின் நிலையைக் கண்டு அக்கிராமமே சோகத்தில் மூழ்கியது.
பாம்பு கடித்து உயிரிழந்த மகன்
திருப்பதி மாவட்டம், கே.வி.பி.புரம் மண்டலம், திகுவபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் செஞ்சய்யா. இவர் ஒரு விவசாயி. இவருக்கு 7 வயதில் பசவையா என்ற மகன் உள்ளார். இவர் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்நிலையில் நேற்று காலை செஞ்சய்யா தன் குடும்பத்தோடு நிலத்தில் விவசாய வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மகன் பசவையாவை அங்கு வந்த பாம்பு ஒன்று கடித்தது.
இதனால், வலியால் பசவையா அலறி துடித்தான். இவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்த செஞ்சய்யா அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக சிகிச்சைக்காக கே.வி.பி. புரம் முதன்மை சுகாதார மையத்திற்கு மகனை தூக்கிக்கொண்டு ஓடினார். சுகாதார மையத்தில் மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனில்லாமல் சிறிது நேரத்தில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
தோளில் சுமந்து சென்ற தந்தை
இதனையடுத்து, மகனின் உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸுக்கு போன் செய்தார் செஞ்சய்யா. ஆனால், ஆம்புலன்ஸ் சிறுவனின் உடலை ஏற்றிச்செல்ல வர மறுத்துள்ளனர். இதனால் வேறு வழியின்றி மகனை, செஞ்சய்யா தனது தோளிலேயே சுமந்து வீட்டிற்கு கொண்டு சென்றார்.
இறந்துபோன மகனின் உடலை தன் தோளில் சுமந்து கொண்டு வந்த தந்தையின் நிலையைக் கண்டு அக்கிராமே சோகத்தில் மூழ்கியது.