ஆக்சிஜன் குழாயைத் திருடி சென்ற மர்ப நபர்..உயிருக்கு போராடிய பச்சிளம் குழந்தைகள் - நள்ளிரவில் நடந்த அவலம்!
மருத்துவமனையில் ஆக்சிஜன் குழாய்கள் திருடப்பட்டதால் 20 பச்சிளம் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பச்சிளம் குழந்தை
மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனையில் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைபெற்று வருகின்றனர். இதில் பெரியவர்கள் முதல் பச்சிளம் குழந்தைகள் வரை அடங்குவர். அந்த வகையில் பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப்பிரிவில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் சுவாசப்பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு ஆக்சிஜன் இணைப்பு மூலம் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று இரவு அடையாளம் தெரியாத மர்மநபர்கள் மருத்துவமனைக்குள் நுழைந்து, ஆக்சிஜன் வினியோகம் செய்யப்படும் 10 முதல் 15 அடி நீளமுள்ள செம்பு குழாய்களைத் திருடிச்சென்றுள்ளனர்.
மேலும் செம்புக்குமாய் துண்டிக்கப்பட்டது. இதனால் செயற்கை சுவாசம் தடைப்பட்டதால் 20 பச்சிளம் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அந்த சமயத்தில் வார்டில் இருந்து எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் மருத்துவர்கள் , செவிலியர்கள் மற்றும் தொழில் நுட்ப ஊழியர்கள் வந்து பார்த்தனர்.
மூச்சுத்திணறல்
அப்போது பச்சிளம் குழந்தைகள் மூச்சு விட முடியாமல் தவித்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து குழந்தைகளைக் காப்பாற்றும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டனர். அப்போதுதான், ஆக்சிஜன் வினியோகம் செய்யும் செம்புக்குழாய்கள் திருடுபோய் இருந்தது தெரியவந்தது.
உடனடியாக வேறு சிலிண்டர்களில் இருந்து மாற்று இணைப்புகள் எடுத்து வந்து மீண்டும் செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.