ஓயாத வன்முறை.. 2 மாணவர்கள் கடத்தி கொடூரக் கொலை - மக்கள் பதற்றம்!
மணிப்பூரில் 2 மாணவர்கள் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வன்முறை
மணிப்பூர் மாநிலத்தில், அதிகளவில் பழங்குடியின மக்கள் உள்ளனர். இதில் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக இம்பால் பகுதியில் மைத்தேயி மற்றும் குக்கி இன மக்கள் இடையே மே மாதம் 3ம் தேதி கடும் மோதல் ஏற்பட்டது.
இந்த மோதல் தொடர்ந்து வன்முறையாக நீடித்து வருகிறது, அதில் சில நாட்களுக்கு முன் குக்கி இனத்தை சேர்ந்த 2 பெண்கள் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மேலும், ஆயுதம் ஏந்திய போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர், ஆனாலும், அங்கு தொடர்ந்து வன்முறை கொலைகள் நடந்து வருகிறது.
கொடூரக் கொலை
இந்நிலையில், மணிப்பூர் மாநில தலைநகரான இம்பாலை சேர்ந்த மைத்தேயி இன பிஜாம் ஹேமன்ஜித் (வயது 20), ஹிஜாம் லிந்தோய்ங்கன்பி (17) ஆகியோர் ஆயுதம் ஏந்திய கும்பலால் கடத்தப்பட்டனர். அந்த மாணவர்கள் கடத்தப்பட்டு பிணைக்கைதி போன்று வைத்துள்ளதாக தகவல் வெளியானது.
இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வந்த நிலையில் 2 மாணவர்களை கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களுக்கு இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மக்கள் மீண்டும் போராட்டத்தை நடத்த தொடங்கினர். மாணவர்கள், போலீசாருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. சில இடங்களில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.
இது குறித்து முதல்வர் பீரன் சிங், "இந்த விசாரணையை இன்னும் விரைவுப்படுத்துவதற்காக சிபிஐ இயக்குனர் சிறப்பு குழுவுடன் சிறப்பு விமானத்தில் நாளை (அதாவது இன்று) இம்பாலுக்கு வருகிறார். இந்த நடவடிக்கை என்பது வழக்கை விரைந்து தீர்ப்பதற்கான உறுதியான நிலைப்பாட்டை காட்டுகிறது. மேலும் சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.