பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலம் - முக்கிய நபரின் வீட்டிற்கு தீவைத்த பெண்கள்!
மணிப்பூர் விவகாரத்தில் முக்கிய குற்றவாளியின் வீட்டிற்கு கிராம பெண்கள் தீவைத்துள்ளனர்.
மணிப்பூர் விவகாரம்
மணிப்பூரில் குகி பழங்குடியின பெண்களை நிர்வாணமாக்கி சாலையில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தடுக்க முயன்ற பெண்ணின் சகோதரர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
77 நாட்கள் கழித்து இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி ஸ்தம்பிக்க வைத்தது. இந்நிலையில், 78 நாட்கள் கழித்து குற்றத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை கொண்ட கும்பலில் ஹெய்ரெம் ஹிரோதாஸின்(32) என்பவரை கைது செய்தனர்.
வீட்டுக்கு தீவைப்பு
அவரை தொடர்ந்து தற்போது மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனிடையே முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஹுய்ரெம் மெய்தேவின் வீடு அவரின் கிராமத்தினராலேயே தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு நபரின் வீடும் தீயிட்டு கொளுத்தப்பட்டது.
இது தொடர்பாக அக்கிராம பெண்கள் கூறுகையில், ஒரு பெண்ணாக இதையறிந்து வெட்கப்படுகிறோம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பெண்ணாக தோள் கொடுக்கிறோம். இது ஒட்டுமொத்த மெய்தி இனத்துக்கே தலைகுனிவு, இவரை போன்ற ஒரு நபரை நம் சமூகத்தில் அனுமதிக்க முடியாது என்றனர்.