பள்ளியில் இருந்த பள்ளத்தில் பறிபோன 2 மாணவிகள் உயிர் - அலட்சியத்தியத்தால் கொடுமை!
பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி 2 மாணவிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அலட்சியம்
திருப்பத்தூர், வாணியம்பாடியைச் சேர்ந்த கூலி தொழிலாளிகள் கோவிந்தராஜன், வேலு. இவர்களின் மகள்கள் மோனிகா 5ஆம் வகுப்பும் ராஜலட்சுமி 9ஆம் வகுப்பும் படித்து வந்தனர்.
அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக விளையாட்டு மைதானத்தில் 10 அடிக்கு மேல் பள்ளம் தோண்டி அங்கிருந்த மண்ணை எடுத்து சாலை பணிக்காக பயன்படுத்தி உள்ளனர்.
2 உயிர்கள் பலி
அந்த இடத்தில் எச்சரிக்கை பலகை எதுவும் வைக்கவில்லை. இந்நிலையில், கடந்த 4 நாட்களாக பெய்த கன மழை காரணமாக தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில் மழை நீர் தேங்கி காணப்பட்டது.
அப்போது, மாலை பள்ளி முடிந்ததும் வீட்டிற்குச் சென்ற மோனிகா, ராஜலட்சுமி, மணிவேல் ஆகியோர் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் பள்ளிக்கு வந்து தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் குளித்ததாக கூறப்படுகிறது.
போராட்டம்
அதில், மணிவேல் தண்ணீரில் இருந்து மேலே வந்து மாணவிகளை தேடியதில் அவர்களை காணவில்லை. உடனே அளித்த தகவலின் பேரில், பொதுமக்கள் அங்கு வந்து நீரில் மூழ்கிய 2 சிறுமிகளையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பரிசோதனையில் இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
அதனையடுத்து, போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளம் தோண்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், மாணவிகளின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கவும், கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.