தேங்கிய மழைநீரில் மூழ்கிய கார் - பெண் மருத்துவர் பரிதாப பலி
புதுக்கோட்டை அருகே சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரில் சிக்கி காரில் சென்ற மருத்துவர் சத்யா உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே துடையூரைச் சேர்ந்தவர் சிவக்குமார் என்பவர் மனைவி சத்யா கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்து வந்தார். இவர் தனது மாமியார் ஜெயமுடன் சேர்ந்து துடையூருக்கு நேற்று இரவில் காரில் சென்று கொண்டிருந்தார்.
காரை சத்யா ஓட்டிச்சென்ற நிலையில், கடந்த சில நாட்களாக அப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக துடையூர் ரயில்வே சுரங்கப் பாதையில் மழை நீர் தேங்கி இருந்தது. அதன் வழியே லாரி கடந்து சென்றதை அறிந்த சத்யா தனது காரும் சென்று விடும் என நினைத்து ஓட்டியுள்ளார்.
சுரங்கத்தினுள் செல்ல செல்ல சாலையில் இருந்த தண்ணீர் சைலன்சரில் புகுந்து காரானது நீருக்குள் மூழ்க ஆரம்பித்துவிட்டது. இதனால் காருக்குள்ளிருந்த இருவரும் அலறி துடித்தனர்.அவர்களால் உடனடியாக நீரில் இருந்து வெளியே வர முடியவில்லை.
ஒருகட்டத்தில் மாமியார் மட்டும் காரின் கதவை திறந்து கொண்டு நீச்சல் அடித்து வெளியேறிவர முயன்றார். ஆனால், வண்டியை ஓட்டிக் கொண்டு வந்த சத்யா, சீட் பெல்ட் அணிந்திருந்ததால் உடனடியாக அவரால் வெளியேற முடியாமல் தண்ணீருக்குள்ளேயே மூச்சுத்திணறி மூழ்கிவிட்டார்.
இதையறிந்த அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சத்யா ஏற்கெனவே இறந்துவிட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கூறினர். ஜெயமுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சுரங்கப் பாதையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்திப் பொதுமக்கள் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து கோட்டாட்சியர் தண்டாயுதபாணி முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், சுரங்கப்பாதையை நிரந்தரமாக மூடுவது, ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்த ரயில்வே கேட்டை திறந்து தற்காலிகப் பாதையாகப் பயன்படுத்துவது, கேட்டைப் பராமரிக்கப் பணியாளர் நியமிப்பது, இறந்த சத்யாவின் குடும்பத்தினருக்கு மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து நிவாரணம் பெறுவது என முடிவு செய்யப்பட்டது.