160 அடி உயரம்; ஆசியாவிலேயே பிரம்மாண்ட முருகன் சிலை - இனி கோவையின் அடையாளம்!
ஆசியாவிலேயே மிக உயரமான முருகன் சிலை அமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
முருகன் சிலை
கோவை, மருதமலை கோயிலில் ஏப்ரல் 4-ம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மருதமலை கோயிலில் ஆய்வு மேற்கொண்டார்.

பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2,400 கோயில்களில் குடமுழுக்கு நடந்துள்ளன. பழநி உள்ளிட்ட 90 முருகன் கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளன. மருதமலை கோயிலில் முதல்கட்டமாக ரூ.6.5 கோடி மதிப்பில் பணிகள் நடந்துள்ளன.
இரண்டாவது கட்டமாக ரூ.11 கோடி செலவில் அன்னதான கூடம், முடி காணிக்கை கூடம் உள்ளிட்டவை அமைக்கவுள்ளோம். மூன்றாவது கட்டமாக ரூ.23 கோடி செலவில் பெருந்திட்ட வரைவு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதேபோல பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில், திருச்சி வயலூர் முருகன் கோயில்,
அமைச்சர் அறிவிப்பு
ஊட்டி காந்தல் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளிட்ட 7 கோயில்களில் ரூ.872 கோடி செலவில் பெருந்திட்ட வரைவு பணிகள் நடைபெற உள்ளன. மருதமலையில் லிப்ட் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. மே மாதத்துக்குள் லிப்ட் பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

மருதமலை கோயிலில்160 அடி உயரத்தில் கற்களால் ஆன முருகன் சிலையை பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்து வருகிறோம். இதன் மூலம் தமிழ் கடவுள் முருகருக்கு ஆசியாவிலேயே உயரமான சிலை மருதமலையில் அமைக்கப்பட உள்ளது. வெள்ளியங்கிரி மலை ஏற்றத்துக்கு உரிய பாதுகாப்பு வசதி செய்யப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 25
அமெரிக்காவிற்கு பேரிடி : ஹோர்முஸ் நீரிணையில் ஆளில்லா நீர்மூழ்கி உளவு கப்பலை கைப்பற்றியது ஈரான் IBC Tamil