பப்ஜி விளையாடுவதை கண்டித்த தாயை சுட்டுக்கொன்ற சிறுவன்..!

India
By Thahir Jun 09, 2022 03:59 AM GMT
Report

உத்தர பிரதேசத்தில் பப்ஜி விளையாடுவதை கண்டித்த தாயை 16 வயது சிறுவன் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பப்ஜி மோகம்

உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் சாதனா. இவரது கணவர் ராணுவத்தில் பணியாற்றுகிறார். இவர்களது 16 வயது மகன் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறுவன் பப்ஜி விளையாடுவதை தாய் சாதனா கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், தனது தந்தையின் துப்பாக்கியை எடுத்து பெற்ற தாயை சுட்டுக் கொன்றுள்ளான்.

பின்னர் அவரின் சடலத்தை ஏ.சி அறையில் வைத்துவிட்டு, துர்நாற்றம் வராமல் இருக்க room freshener-ஐ அடித்துள்ளான்.

தாய் கொலை செய்யப்பட்டதை அறிந்த 10 வயது தங்கையை கொலை செய்துவிடுவதாக மிரட்டி சிறுவன், மூன்று நாட்களை ஒரு அறையில் அடைத்து வைத்துள்ளான்.

மேலும், தனது நண்பர்களை வீட்டிற்கு வரவழைத்த குறித்த சிறுவன், அவர்களுக்கு மது விருந்து வைத்துள்ளான்.

சிக்கியது எப்படி?

இந்த நிலையில் துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், சிறுவனின் தந்தைக்கு தகவல் அளித்துள்ளனர்.

அவர் வீட்டிற்கு வந்தபோது தனது மனைவி அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

அப்போது எலக்ட்ரானிக் வேலை செய்ய வந்த நபர் தாயை கொலை செய்துவிட்டதாக சிறுவன் தனது தந்தையிடம் கூறியுள்ளான். ஆனால் போலீசார் விசாரணை செய்தபோது சிறுவன் உண்மையை ஒப்புக்கொண்டான்.

அதனைத் தொடர்ந்து உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பொலிஸார், சிறுவனை கைது செய்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.