கடனை திருப்பிக் கேட்ட தயாரிப்பாளர்..பொய் வழக்கு போட்ட மறைந்த நடிகரின் மனைவி
கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதற்கு பொய் வழக்கு போட்டதாக மறைந்த நடிகரின் மனைவி மீது சினிமா தயாரிப்பாளர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
சிவா மனசுல புஷ்பா உட்பட பல திரைப்படங்களை தயாரித்த வாராகி விருகம்பாக்கம் நடேசன் நகரில் அமைந்துள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இதே குடியிருப்பில் வசித்து வந்த சுஜிதா என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளுமாறு இவர் நீண்ட மாதங்களாக வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. சுஜிதா மறைந்த சின்னத்திரை நடிகர் சாய் பிரசாத்தின் 2வது மனைவி ஆவார்.
வராகியால் மன உளைச்சல் அடைந்த சுஜிதா வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வாராகி மீது புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் தயாரிப்பாளர் வாராகியை கைது செய்து பெண் வன்கொடுமை சட்டம், பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், மிரட்டல் உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்ட வராகி தற்போது ஜாமீனில் வெளிவந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் சுஜிதா தன்னோடு 2016 ஆம் ஆண்டில் இருந்து சுமார் மூன்று வருடம் வேலை பார்த்ததாகவும், பின் அவரது நடவடிக்கைகள் சரியில்லாததால் வேலையை விட்டு நிறுத்தி விட்டதாகவும் கூறியுள்ளார்.
இதனிடையே தனக்கு ஆன்லைன் மூலம் கடன் அதிகமாகி வட்டி மற்றும் இஎம்ஐ செலுத்த வேண்டிய காரணத்தினால் உடனடி கடனாக இரண்டு அல்லது மூன்று லட்ச ரூபாய் வேண்டும் என்றும், கடனை திருப்பி செலுத்தாததால் ஆபாசமாக போட்டோ வீடியோக்களை அனுப்பி மிரட்டுவதாக சுஜிதா தனக்கு வாட்ஸ் அப் மூலம் செய்தி அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்களில் பணத்தைத் திருப்பித் தருவதாக கூறியதால் மகளுக்கு கல்விக்கட்டணம் செலுத்த வேண்டிய பணத்தை கொடுத்து உதவினேன். ஆனால் 2 லட்ச ரூபாய் பணத்தை திருப்பிக் கேட்டபோது தொடர்ந்து அலைக்கழித்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.மேலும் பணத்தை கேட்காமல் இருப்பதற்காக தன் மீது பொய் புகார் அளித்து வழக்குப்பதிவு செய்து இருப்பதாக வராகி தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான வாட்ஸ்அப் சாட்கள், வீடியோக்களை ஆதாரமாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும் வராகி கூறியுள்ளார்.