சாப்பாட்டுக்கே வழியில்லை: கண்ணீர் விடும் ‘பப்ஜி’மதனின் மனைவி - உயர் நீதிமன்றத்தில் மனு
தன்னுடைய வாழ்வாதாரம் சிரமமாக உள்ளதால் வங்கி கணக்கை திறக்க வேண்டும் என்றும் கோரி பப்ஜி மதன் மனைவி கிருத்திகா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
பப்ஜி விளையாட்டில் ஆபாசமாக பேசி வீடியோ பதிவேற்றம் செய்ததோடு மட்டுமல்லாமல் நிறைய பண மோசடிகளிலும் ஈடுபட்டு வந்ததாக மதனும், அவரது மனைவி கிருத்திகாவும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் இருவர் மீதான குற்றப் பத்திரிகையை சைதாப்பேட்டை கோர்ட்டில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்திருந்தனர்.50-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்த நிலையில், வெறும் 32 பேர் மட்டுமே எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளதாக அந்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மதன் மீது நிறைய புகார்கள் இருந்தால் மனைவி கிருத்திகாவுக்கு மட்டும் ஜாமீன் வழங்கப்பட்டது. அதேசமயம் மதன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தன்னுடைய வங்கிக்கணக்கை திறக்க உத்தரவிடக்கோரி, கிருத்திகா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
கிருத்திகாவின் வங்கி கணக்கில் ரூ.3 கோடி மோசடி பணம் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் அதனை போலீசார் முடக்கம் செய்திருந்தனர். மிக குறுகிய காலத்தில் அந்த ரூ.3 கோடி வங்கி கணக்கில் சேர்ந்துள்ளதாக குற்றப்பத்திரிகையிலும் போலீசார் தெரிவித்திருந்தனர்.
ஆனால் கிருத்திகாவோ தனக்கு சாப்பாட்டுக்குகூட வழியில்லை என்றும், வாழ்வாதாரமே சிரமமாக உள்ளதால் தன்னுடைய வங்கி கணக்கை திறக்க வேண்டும் என்றும், அதற்கான உத்தரவை சைதாப்பேட்டை வங்கிக்கு வழங்க வேண்டும் என்றும் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் கிருத்திகாவின் மனுவை விசாரித்த நீதிமன்றம் அது தொடர்பான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யும்படி சென்னை குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டனர்.