16 வயது சிறுவனை திருமணம் செய்த 30 வயது இளம்பெண் - சென்னையில் பரபரப்பு!
16 வயது சிறுவனை 30 வயது இளம்பெண் திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம்
சென்னை விருகம்பாக்கம் தாங்கல் தெருவைச் சேர்ந்தவர் வனதேவி (30). இவர் அங்குள்ள ஒரு துணிக்கடையில் வேலை செய்து வருகிறார். ஆனால், வனதேவிவிக்கு இன்னும் திருமணமாகவில்லை.
மேலும், விருகம்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவனும் குடும்ப சூழ்நிலை காரணமாக அதே துணிக்கடையில் வேலை செய்துவருகிறார். இவர்கள் இருவரும் ஒரே பகுதி என்பதால் ஒன்றாக வேலைக்கு செல்வது வழக்கம்.
அப்படி செல்லும் போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறிய இருவரும், வடபழனி முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
விசாரணை
இதுகுறித்து தகவலறிந்த சிறுவனின் தாயார் இருவரையும் வீட்டிற்கு அழைத்து வந்த பிறகு விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன் பேரில் வனதேவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது, அந்த சிறுவன் தான் தனது கணவர் என்று கூறி வனதேவி வீட்டிற்கு செல்ல மறுத்துவிட்டார். அதேசமயம் சிறுவனின் தாயாரும் அவர் மீது புகார் அளிக்க மறுத்துவிட்டார். இதனால் வேறு வழியின்றி வனதேவியை மணப்பாக்கத்தில் உள்ள காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.
ஆனால், சிறுவன் மைனர் என்பதால் வனதேவி மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதுதொடர்பாக குழந்தைகள் நல ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது.