இரண்டு தொகுதிகளில் ஒரே வேட்பாளர் களமிறங்குவது ஜனநாயக ரீதியில் சரியானதா..?
நாம் பல தேர்தல்களில் ஒன்றிற்கும் மேற்பட்ட தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிடுவதை கண்டுள்ளோம்.
இது ஜனநாயகமா..?
இங்கு தான் நம்மில் பலருக்கும் பல கேள்விகள் வரலாம். ஜனநாயக நாட்டில் ஒரே வேட்பாளர் இரண்டு தொகுதியில் போட்டியிடவது சரியானதா..? என்று. நாம் நாட்டின் சட்ட அடிப்படையில் அது சரியானதே.
எப்படி வாக்காளர் ஒருவர் தான் ஓட்டு போடாமல் இருப்பதையும் ஜனநாயகம் என்று வாதம் செய்திடும் போது, அதே போல, ஒன்றிற்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஒரே வேட்பாளர் களமிறங்குவதும் அவர்களுக்கான ஜனநாயகம் தானே.
ஆனால், இது சரியான ஒன்றா..? என்ற கேள்வி எழுப்பினால், அது சுயநலமிக்க ஒன்றின் வெளிப்பாடாகவே தெரிகிறது. ஏனென்றால் ஒரு வேட்பாளர் இரண்டு தொகுதிகளில் களமிறங்கி, ஒன்றில் தோற்று மற்றொன்றில் வெற்றி பெற்றால் பிரச்சனை இல்லை.
ஆனால், இரண்டு தொகுதியிலும் அவரே வெற்றி பெற்றுவிட்டால், மீண்டும் ஒரு தொகுதிக்கு இடைதேர்தல் நடத்தப்படவேண்டி வரும். இது பணம் விரயம் - நேர விரயம் போன்றவற்றிற்கு வழி வகுக்கிறது.
நேர - பண விரயம்
கடந்த 2014-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் உத்திர பிரதேசத்தின் வாரணாசி மற்றும் குஜராத்தின் வதோதரா ஆகிய தொகுதியில் களம்கண்டு இரண்டிலும் வெற்றி வாகை சூடினார். இது தேசிய அளவில் அவரின் ஆதிக்கத்தை காட்டும் செயலை நிரூபிக்க செய்யப்பட்டது என்று தெரிவித்தாலும், அதே நேரத்தில் வதோதராவில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டு பின்னர் ரஞ்சன் பட் மக்களவை சென்றார். இது மக்களின் வரி பண விரயம் தானே.
அதனையும் அரசியல்வாதிகள் கருத்தில் கொள்ள வேண்டும். நாட்டின் மக்கள் பிரநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 33(7)-ன் படி ஒரு வேட்பாளர் இரண்டு இடங்கள் வரை போட்டியிட முடியும். 1996-ம் ஆண்டுக்கு முன், இந்தக் கட்டுப்பாடும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சட்டத்தில் திருத்தும் கொண்டு வர முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு தோல்வியில் தான் முடிந்துள்ளது. தேர்தல் ஆணையமே ஒரு வேட்பாளருக்கு ஒரு தொகுதி என்னும் அடிப்படையில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 33(7) திருத்தத்தை பரிந்துரையை கடந்த 2004,2010, 2016, 2018 ஆகிய ஆண்டுகளில் செய்தும் எந்த பலனும் அளிக்கவில்லை என்பதே நிதர்சனம்.