அப்போ செங்கல்..இப்போ முட்டை!! தனது ஸ்டைலில் மத்திய அரசை காலி செய்யும் உதயநிதி!!
நீட் தேர்வுக்கு விலக்குக்கோரி தொடங்கப்பட்டுள்ள நீட் கையெழுத்து இயக்க விழாவில், நீட் தேர்வுக்கு முட்டையை காண்பித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
நீட் விலக்கு கையெழுத்து இயக்கம்
தமிழகத்தில் தொடர்ந்து நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதே முன்னணி குறிக்கோளாக கொண்டு ஆளும் திராவிட முன்னேற்ற கழகம் பணியாற்றி நடவடிக்கைகளை மேற்கொண்டு வ வருகின்றது.
நீட் தேர்வினால் தமிழகத்தில் தொடரும் மரணங்கள் இந்த நடவடிக்கைகளை இன்னும் மும்முரப்படுத்தி இருக்கின்றது. இந்நிலையில், திமுக இளைஞர் அணி சார்பில் நீட் விலக்கு கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த இயக்கத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று கையெழுத்திட்டு துவங்கி வைத்தார். இந்த விழாவில் விழாவில் கலந்து கொண்ட தமிழக விளையாட்டு துறை அமைச்சரும், திமுகவின் இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலினும் தன்னுடைய கையெழுத்தையும் பதிவிட்டார்.
முட்டையே போதும்
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், நீட் தேர்வு குறித்த தமிழ்நாடு அரசின் மனதை புரிந்துகொள்ள மத்திய அரசு மறுக்கிறது என குற்றம்சாட்டி, நீட் விலக்கு மசோதா 21 மாதங்களாக குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக காத்துக் கிடக்கிறது என்பதை குறிப்பிட்டார்.
தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல மாநிலங்களிலும் நீட் தற்கொலைகள் தொடர்வதை சுட்டிக்காட்டி பேசிய அவர், நீட் வந்தால் தரமான மருத்துவர்கள் வருவார்கள்- மருத்துவப் படிப்புக்கு பணம் தேவையில்லை என்றெல்லாம் மத்திய அரசு கூறியதை குறிப்பிட்டு, ஆனால் தற்போது நீட் முதுநிலை படிப்பு தகுதித்தேர்வில் 'முட்டை' மதிப்பெண்கள் எடுத்தாலே போதும் என்கிறார்கள் என்று விமர்சித்தார்.
அதிமுகவும் வரவேண்டும்
தொடர்ந்து பேசிய அவர், ஜனநாயகத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையில் இந்த கையெழுத்து இயக்கத்தை தொடங்கியிருப்பதாக குறிப்பிட்டு, நீட் ஒழிப்புக்காக சேர்ந்து போராட அதிமுகவும் வாருங்கள் என்று அழைப்பு விடுத்து, நீட் ஒழிந்தால் போதும் என்றார்.
கூட்டணியை விட்டு வெளியேறி விட்ட காரணத்தால் நீட்டுக்கு எதிராக போராட முன்வாருங்கள் என கேட்டுக்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாணவர்களின் கல்வி உரிமைக்கான இந்த இயக்கத்தில் அதிமுகவும் கையெழுத்திட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
தமிழ்நாட்டில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி திமுக தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருவதை சுட்டிக்காட்டி, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் அடிப்படையில் தமிழ்நாட்டு மாணவர்கள் எளிமையாக மருத்துவப் படிப்பில் சேர்ந்து வந்த நிலையில், நீட் தேர்வு அதற்கு பெரும் தடை கல்லாக மாறிவிட்டது என்று குறை கூறினார்.
தமிழ்நாட்டில் மருத்துவ கட்டமைப்பும், மருத்துவ கல்வியும் மற்ற மாநிலங்களை விட மிகச்சிறப்பாக இருந்து வரும் சூழலில் இதனை தமிழ்நாட்டு மாணவர்கள் நன்கு பயன்படுத்தி வந்தனர் என்ற உதயநிதி ஸ்டாலின், கடந்த அதிமுக ஆட்சியில் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் இந்த நீட் தேர்வு தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது என்றும் அதிமுகவும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே நீட் தேர்வை நடைமுறைப்படுத்த வேண்டியதாகிவிட்டது என்ற விளக்கம் அளித்து வருகிறது என்றார்.