ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல்; இயக்குநர் அமீருக்கு சம்மன் - வழக்கில் ட்விஸ்ட்!
ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தல் வழக்கில், விசாரணைக்கு ஆஜராகுமாறு திரைப்பட இயக்குநர் அமீருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல்
மேற்கு டெல்லியின் கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோனில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். இதில் போதை பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் ரூ.2,000 கோடி மதிப்புள்ள 50 கிலோ ரசாயனப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், இதற்கு மூளையாக செயல்பட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராகவும் இருந்த ஜாபர் சாதிக்கை போலீசார் தேடிவந்தனர்.
அமீருக்கு சம்மன்
ஆனால் ஜாபர் சாதிக் தலைமறைவானதை அடுத்து, அவரை டெல்லி போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக ஜாபர் சாதிக்கிற்கு நெருக்கமானவர்கள் ஆகியோரிடமும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு விரைவில் விசாரணை நடத்தும் என ஏற்கெனவே தகவல்கள் வெளியாகியது.
குறிப்பாக அவருடன் நெருக்கமாக இருந்து வந்த இயக்குநர் அமீரை இந்த விவகாரத்தில் தொடர்புபடுத்தி பேச்சுகள் எழுந்து வந்தன. அப்போது அமீர் ஜாபர் சாதிக், தொழில் ரீதியாக தான் தெரியுமே தவிர, வேறேதும் தெரியாது என்றும் தனக்கு தொடர்பு இல்லை என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஜாபர் சாதிக் தொடர்புடைய போதைப் பொருள் கடத்தில் வழக்கில் டெல்லியில் உள்ள போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராகுமாறு இயக்குநர் அமீருக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது.இதனால் இந்த வழக்கில் ஒரு திருப்புமுனை ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.