பாஜகவின் கூட்டணிக்காக போட்டிபோடும் ஜெகன் - சந்திரபாபு நாயுடு...! அதிரும் ஆந்திர அரசியல்
ஆந்திர மாநிலத்தில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் நடைபெறவுள்ளது.
ஆந்திர மாநிலம் அரசியல்
கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சியான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 151 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருப்பெற்றது.
எதிர்த்து களம் கண்ட சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி வெறும் 23 இடத்தையும், பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி 1 இடத்தையும் கைப்பற்றியது. நாடாளுமன்ற தேர்தலில் 25 இடங்களில் 22 இடங்களை ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் வென்ற நிலையில், 3 இடங்களை தெலுங்கு தேசம் கட்சி பெற்றது.
தென்னிந்திய மாநிலங்களில் பாஜக கால்பதிக்க முயன்று வரும் நிலையில், தற்போது ஆந்திர மாநிலத்தின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் இரண்டுமே பாஜகவின் கூட்டணிக்காக காத்திருக்கின்றன.
நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசிய நிலையில், இன்று நாடாளுமன்ற வளாகத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இது அம்மாநில அரசியலில் பெரும் முன்னெடுப்பாக கூறப்படுகிறது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் தனி தனி கட்சிகளாக போட்டியிட்ட தெலுங்கு தேசம் மற்றும் ஜன சேனா கூட்டணி அமைத்துள்ள நிலையில், இக்கட்சிகளின் கூட்டணி பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.