youtube-இல் லட்சம் வீடியோக்கள் அதிரடி நீக்கம்; இந்தியாவில் தான் அதிகமாம்! என்ன காரணம்?
தீங்கு விளைவிக்ககூடிய 90 லட்சம் வீடியோக்கள் கடந்த மூன்று மாதங்களில் யூடியூப்பில் இருந்து நீக்கபட்டுள்ளது.
வீடியோ நீக்கம்
உலகெங்கிலும் உள்ள பல கோடி மக்கள் யூடியூப் தளத்தில் தங்களது வீடியோக்களை பதிவேற்றி வருகின்றனர். அதனை ரசிக்கவும் பல மக்கள் உள்ளனர். அந்த வகையில், அந்த மாதிரியான வீடியோக்களில் ரசிக்கத்தக்கவை பல இருந்தாலும் அருவருக்கதக்கவைகளும் ஏராளமானவை இருக்கின்றன.
எனவே, அவற்றை கண்டறிந்துநீக்கம் செய்வதை யூடியூப் நிறுவனம் தொடர்ந்து செய்து வருகிறது. சமூக வழிகாட்டுதல்களுக்கு எதிரான விஷயங்களை கொண்ட வீடியோக்களை அந்த நிறுவனம் நீக்கி வருகிறது.
தீங்கு விளைவிக்கும் அல்லது ஆபத்தான உள்ளடக்கம், குழந்தை பாதுகாப்பு விதிமீறல், வன்முறை அல்லது கிராபிக் உள்ளடக்கம், நிர்வாணம் மற்றும் பாலியல் உள்ளடக்கம் உள்ளிட்ட தவறான தகவல்களை கொண்டுள்ள வீடியோக்கள் நீக்கபட்டுள்ளது.
என்ன காரணம்?
இவ்வாறு கடந்த ஆண்டு அக்டோபர் தொடங்கி டிசம்பர் வரை 3 மாதங்களில் 90 லட்சத்துக்கு மேற்பட்ட வீடியோக்களை யூடியூப் நிறுவனம் நீக்கியுள்ளது. இதில், குறிப்பிட்டு இந்தியாவில் பதிவேற்றம் செய்யப்பட்டவை தான் அதிகம் நீக்கம் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
இதுவரை நீக்கம் செய்யப்பட்டவைகளில் உலக அளவில் இந்தியா முதலிடம் பிடித்து இருக்கிறது. அதாவது இந்த 3 மாதங்களில் 22,54,902 இந்திய வீடியோக்கள் நீக்கப்பட்டு உள்ளன. அடுத்த இடத்தில் சிங்கப்பூரிலிருந்து பதிவிடப்பட்ட 12,43,871 வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன.
அதை தொடர்ந்து அமெரிக்காவிலிருந்து பதிவிடப்பட்டிருக்கும்
7.88 லட்சம் வீடியோக்களும், இந்தோனேசியாவிலிருந்து 7.70 லட்சம் வீடியோக்களும், ரஷியாவிலிருந்து பதிவிடப்பட்ட 5.16 லட்சம் வீடியோக்களும் அகற்றப்பட்டுள்ளன.
இதேபோல பல்வேறு நாடுகளின் சேர்ந்த பல லட்சம் வீடியோக்களை யூடியூப் நிறுவனம் நீக்கியது குறிப்பிட்டத்தக்கது.