ஒரே நேரத்தில்..பாஜவுக்கு 8 முறை வாக்களித்த இளைஞர் கைது - வெளியான திடுக்கிடும் வீடியோ!
நடப்பாண்டின் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பாஜவுக்கு வாக்கு
நாடு முழுவதும் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடக்க இருக்கிறது. அதில் முதல் 4 கட்டங்கள் நடந்து முடிந்த நிலையில், தற்போது 5ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்து வருகிறது. இந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் பாஜக வேட்பாளருக்கு இளைஞர் ஒருவர் 8 முறை வாக்களிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக நடந்து முடிந்த 4 ஆம் கட்ட தேர்தலின் போது ஃபரூக்காபாத் தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் இருந்து ஒரு வீடியோ வெளியானது. அதில், ஃபரூக்காபாத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முகேஷ் ராஜ்புத் என்பவருக்கு அந்த இளைஞர் 8 முறை வாக்களிக்கிறார்.
தான் 8 முறை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பதை அந்த இளைஞரே வீடியோவாகவும் பதிவு செய்திருக்கிறார். தற்போது அது சமூக வலைத்தளங்களில் வெளியாகி தீயாய் பரவியது.
இளைஞர் கைது
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், நெட்டிசன்கள் பலர் தேர்தல் ஆணையத்தை டேக் செய்து அந்த இளைஞர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதேபோல சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ்வும், தனது 'எக்ஸ்' தளத்தில் இது குறித்து, 'இது தவறு என்று தேர்தல் ஆணையம் உணர்ந்தால், கண்டிப்பாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பா.ஜனதாவின் பூத் கமிட்டி உண்மையில் கொள்ளை கமிட்டி உண்மையில் கொள்ளை கமிட்டிதான்' என்று பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து, 8 முறை வாக்களித்த அந்த ராஜன் சிங் இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து வாக்குப்பதிவு மையத்தில் தேர்தல் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரப்பிரதேச தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் மறு வாக்குப்பதிவு நடத்த இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.