பட்டினப்பாக்கம் குடியிருப்பு.. பால்கனி இடிந்து விழுந்து இளைஞர் பலி - மக்கள் சாலை மறியல்!
பால்கனி இடிந்து விழுந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குடியிருப்பு
சென்னை பட்டினப்பாக்கம் அடுத்த சீனிவாசபுரத்தில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு நான்காவது தளத்தில் நேற்று இரவு பால்கனி இடிந்து விழுந்து குலாப் (24) என்ற இளைஞர் உயிரிழந்தார்.
மசூதியில் தொழுகையை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தப்போது இந்த துயர சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கிய அவரை மீட்டு, அப்பகுதி மக்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏற்கனவே நிச்சயதார்த்தம் நடைபெற்று விரைவில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் குலாப் இறந்தது பொரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞர்
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே இளைஞர் உயிரிழந்ததை கண்டித்து வாலிபரின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், அப்பகுதி மக்கள் என பலரும் பட்டினப்பாக்கத்தில் உள்ள முக்கிய சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சூழலில், குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பலியான இளைஞர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்துள்ளார். மேலும், விபத்து ஏற்பட்ட குடியிருப்பை இடித்துவிட்டு புதிய குடியிருப்பு கட்டித் தரப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.