ரோந்து பணியில் இருந்த போலீசார்..எமனாக வந்த ரேஸ் பைக்- துடிதுடித்து பலி!
அதிவேகமாக வந்த ரேஸ் பைக் மோதி காவலர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ரேஸ் பைக்
சென்னையை அடுத்த திருவேற்காடு பகுதியைச் சேர்ந்தவர் குமரன்(53). இவருக்குத் திருமணம் ஆகி இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் போரூர் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணிபுரிந்து வருகிறார்.
சென்ற 3 நாட்களுக்கு முன்புதான் போக்குவரத்து காவல் பிரிவிலிருந்து, சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு மாற்றபட்டார். இந்நிலையில் மதுரவாயல் - தாம்பரம் பைபாஸ் சாலையில் போரூர் சுங்கச்சாவடி அருகே தனது இரு சக்கர வாகனத்தின் மூலம் காவலர் குமரன் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது, அதிவேகமாக வந்த ரேஸ் பைக் ஒன்று குமரன் மீது மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். குமரன் மீது வேகமாக பைக்கில் வந்து மோதிய நபரும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
போலீசார் பலி..
இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காவலர் குமரன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து, பைக் ஓட்டி விபத்தை உண்டாக்கிய நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் பைக் ரேஸால் நடந்த இந்த விபத்தில் காவலர் ஒருவர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.சமீபகாலமாக மீண்டும் பைக் ரேஸ் கலாச்சாரம் மதுரவாயல் தாம்பரம் சாலையில் தலைத்தூக்கி உள்ளதா?
என்பதை காவல்துறையினர் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் வாகன ஓட்டிகளும் கேட்டு கொண்டுள்ளனர். மேலும் இதற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.