இளைஞரை அடுத்தடுத்து கடித்த நாய், பூனை.. தடுப்பூசி போட்டாமல் அலட்சியம் - கடைசியில் நேர்ந்த கொடூரம்!
நாய், பூனை கடிகளுக்குத் தடுப்பூசி செலுத்தாததால் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை
மும்பையில் உள்ள கல்யாண் பகுதியில் வசித்து வருபவர் பகவான் மண்ட்லிக் (வயது 27) . இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன் கோல்டன் பார்க்கில் நடைப்பயிற்சி சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவரை தெருநாய் ஒன்று கடித்துள்ளது . அடுத்த சில நாட்களுக்குப் பிறகு பூனையும் அவரை கடித்துள்ளது.
இதனை அலட்சியமாக நினைத்துள்ளார். இதனையடுத்து கடந்த ஒரு வாரத்துக்கு மேலாகப் பகவான் மண்ட்லிக்கு தலைவலி, உடல் வலி மற்றும் தொண்டை வறட்சி போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு, அவர் வெவ்வேறு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
ஆனால் உடல் நிலையில் முன்னேற்றம் அடையாததால் இறுதியில் மும்பை கஸ்தூர்பா மாநகராட்சி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக வந்துள்ளார். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்துள்ளனர். அப்போது அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. இதனைத் தொடர்ந்து அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.
உயிரிழந்த சம்பவம்
ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நாய் மற்றும் பூனை கடித்த பின்னர் பகவான் மண்ட்லிக், ரேபிஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை . இதனால் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்து இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
நாய் கடித்து விட்டால் உடனே மருத்துவ ஆலோசனையுடன் சிகிச்சையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். ரேபிஸ் தடுப்பூசி நாய் கடித்த நாள் , மூன்றாவது நாள், ஏழாவது நாள் 28வது நாட்களுக்குள் போடப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.