காதை கடித்து துப்பிய நபர்; அடிதடியில் முடிந்த பிறந்தநாள் விழா - என்ன நடந்தது?
முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் நபர் ஒருவர் கதை கடித்து துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்விரோதம்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பெரியகாலனி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த தம்பதி ஆனந்தவேல் - சரண்யா. குடும்ப தகராறு காரணமாக ஆனந்தவேலின் தம்பி லட்சுமணன் மற்றும் சரண்யா இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் இவர்களது உறவினர் ஒருவரது குழந்தையின் பிறந்தநாள் விழா அந்த பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் இருவரது குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். அப்போது மண்டபத்தில் இருந்து வெளியே வந்த சரண்யாவின் அண்ணன் சக்கரவர்த்தி எச்சில் துப்பியுள்ளார்.
போலீசார் விசாரணை
இதைப் பார்த்த லட்சுமணன் மனைவி திவ்யா என்னைப் பார்த்து ஏன் எச்சில் துப்புகிறாய்? என்று கேட்டார். இதனால் இரு குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கிக்கொண்டனர்.
அப்போது சக்கரவர்த்தியின் தம்பி சங்கர் என்பவர் லட்சுமணனின் வலது புற காதை கடித்து கீழே துப்பினார். இதில் காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து இரு தரப்பினரும் விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்தனர். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இருதரப்பினரிடையேயும் விசாரித்து வருகின்றனர்.