மகனுடன் சேர்ந்து வாலிபரை தாக்கிய பிரபல தமிழ் நடிகை - போலீசார் விசாரணை!
நடிகை ராதா
சுந்தரா டிராவல்ஸ், கேம், அடாவடி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ராதா. இவர் சென்னை சாலிகிராமம், லோகையா காலனியில் தனது மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் ரிச்சர்ட் (22) என்பவர் தனது வீட்டுக்கு நடந்து சென்றார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற ராதா மற்றும் அவரது மகன் ஆகியோர் சேர்ந்து பிரான்சிஸ் ரிச்சர்ட்டிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றியதால் இருவரும் சேர்ந்து அவரை கையாலும், கல்லாலும் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
போலீசார் விசாரணை
இதுகுறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பிரான்சிஸ் ரிச்சர்ட் அளித்த புகாரின் பேரில் நடிகை ராதா மற்றும் அவரது மகன் ஆகியோரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இவர்களுக்கு இடையே ஏற்கனவே முன்விரோதம் இருப்பதாக கூறப்படுகிறது.
தன்னை பிரான்சிஸ் ரிச்சர்ட் கிண்டல் செய்ததாக கடந்த டிசம்பர் மாதம் ராதா விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் பிரான்சிஸ் ரிச்சர்ட், தனது உறவினர் ஒருவருடன் ராதா வீட்டுக்கு சென்று அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்துள்ளார்.
பின்னர் இரு தரப்பினரும் சமாதானமாக சென்றுள்ளனர். இந்நிலையில் பிரான்சிஸ் ரிச்சர்ட், ராதாவை பற்றி அவதூறாக பேசியதாகவும், இதனால் அவருடன் வாக்குவாதம் செய்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது.