சென்னை ராமேஸ்வரம் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் - காரணத்தை கேட்டு அதிர்ந்த போலீசார்
சேது எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
வெடிகுண்டு மிரட்டல்
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவை சேர்ந்த விமான நிறுவனங்களுக்கு சொந்தமான தேச, சர்வதேச விமானங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து கொண்டிருந்தது.
10 நாட்களில் 250க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், விமான தரையிறக்கம், சோதனை, தாமதம் உள்ளிட்ட காரணங்களால் கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
சேது எக்ஸ்பிரஸ்
அதே போல், சென்னையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ரயிலை நிறுத்தி காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். வெடிகுண்டு எதுவும் இல்லாததால் புரளி என தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து சந்தேகத்திற்கிடமாக இருந்த தண்டாயுதபாணி என்ற நபரை பிடித்து விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்துள்ளார். விசாரணையில், விருத்தாச்சலத்தை சேர்ந்தவர் முன்பதிவில்லா டிக்கெட் வாங்கி, முன்பதிவு பெட்டிக்கு உறங்க சென்றுள்ளார்.
அதில் கூட்டம் அதிகமாக இருந்ததோடு, பயணிகள் தூங்கவிடாமல் தொந்தரவு செய்ததால் எரிச்சல் அடைந்து, காவல்துறையினருக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். காரணத்தை கேட்டு அதிர்ந்த காவல்துறையினர்,மதுபோதையில் இருந்த அவரை கைது செய்துள்ளனர்.